Fri. Apr 26th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி கூட்டியுள்ள பொதுக்குழுவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை இபிஎஸ் நீக்கிவிட்டதால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நேற்றிரவு நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தின் போது கொளுத்திப் போட்டுள்ளார். பாவம், அவர் என்ன செய்வார்? ஓபிஎஸ் மீதான பாசம் அவரை இப்படியெல்லாம் பேச வைக்கிறது.

சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் பகலில் குட்டித் தூக்கம் போடும் ரவீந்திரன் துரைசாமிக்கே இவ்வளவு சாணக்கியதனம் இருக்கிறது என்றால், 2017 முதல் 2021 வரை 32 அமைச்சர்கள் 120 எம்எல்ஏக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஐஏஎஸ்கள், 100க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் என ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு நிர்வாகத்தையே ரிங் மாஸ்டர் போல் கட்டி ஆண்ட எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு சாணக்யதனம் இருக்கும்?

ரவீந்திரன் துரைசாமியின் விவகாரத்தை நிறைவில் பார்ப்போம்..

அதிமுகவை கைப்பற்ற ஐபிஎல் ஏலம் போல கோடிகளை கொட்டி மாவட்டச் செயலாளர்களையும், பொதுக்குழு உறுப்பினர்களையும் இழுத்துக் கொண்டிருக்கிறார் கொள்ளைக்காரரான இபிஎஸ் என்று எரிச்சலோடு பேசிக் கொண்டிருக்கிறார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்..

2011 முதல் 2016  அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் மாதந்தோறும் கட்டிய மாமூலை சிந்தாமல் சிதறாமல் போயஸ் கார்டன் கண்களிலேயே காட்டாமல் மன்னார்குடி குடும்ப பிரபலங்களுக்கு பிரித்து வழங்கியவர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும் மன்னார்குடி உறவுகளுக்குள்ளேயே யாருக்கெல்லாம் ஊழல் பணம் பங்காக கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்துவிடாமல் ரகசியமாக கோடிகளை கொண்டு சேர்த்தவர் இபிஎஸ்ஸின் மனசாட்சியாக இருக்கும் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் என்றும் அந்த காலத்தில் ஊரே பேசியதே, அப்போது தெரியவில்லையா, அவர் கொள்ளைக்காரர் என்று?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவுடன் அமமுகவை துவங்கி 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் தலா பத்து கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்ததாக தகவல் வெளியானதே? அந்த பணம் வியர்வை சிந்தி உழைத்த பணமா, டிடிவி தினகரன்?

1985 ஆம் ஆண்டில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சிங்கிள் டீக்கு கூட வழியில்லாமல், அன்றைக்கும் புரட்சித் தலைவரின் பக்தராகவும், அதே உணர்வோடு இன்றைக்கும் இருக்கும் மூத்த பத்திரிகையாளரிடம் உறவாடி மெதுவடையை பாதியாக பங்கு போட்டுக் கொண்ட டிடிவி தினகரனாகவா இன்றைய தினகரன் இருக்கிறார்? அடையார் சொகுசு பங்களா, புதுச்சேரி பண்ணை தோட்டமெல்லாம் எம்பி ஓய்வூதியத்தில் வாங்கியதா டிடிவி தினகரன்?

கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி அதிமுக தலைமை பதவியை பிடிக்க தவியாய் தவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று மூத்த ஊடகவியலாளர்களும் எரிச்சலோடு நாள்தோறும் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் பதவியில் இருந்த போதும் சரி இப்போதும் சரி ஒரு பைசாவை கூட வீணாக செலவு செய்துவிட மாட்டார் என்பதும் சொந்த சமுதாயத்தைச் சேர்ந்த விவிஐபிக்கு வழங்குவதாக இருந்தாலும் சரியாக கணக்குப் பார்ப்பார் என்பதும் அதேநேரத்தில் அதிமுகவின் வெற்றிக்கு கோடி கோடியாக செலவழிக்கக் கூட தயங்காதவர் இபிஎஸ் என்பதற்கும் நான் விசாரித்து அறிந்து இரண்டு நிகழ்வுகளை பகிர்கிறேன்.

ரவீந்திரன் துரைசாமியின் கற்பனையைப் போல, பிரதமர் மோடியை பாராட்டி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற மாட்டார்கள் என்பதை அறிந்துதான் அதிமுகவின் நாளிதழான நமது அம்மா வெளியீட்டாளர் கோவை சந்திரசேகர் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடந்தது என்ற வாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

சந்திரசேகர், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமி என்று அதிமுகவினரே சொல்கிறார்கள். அப்படிபட்ட நிலையில், நமது அம்மா நாளிதழில் சேலம் மாவட்ட அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரத்திற்கு பில் தொகையில் எவ்வளவு குறிப்பிட்டார்களோ, அந்த தொகையை கணகச்சிதமாக, ஒரு ரூபாய் கூடவோ, குறைவாகவோ இல்லாமல் சரியான தொகையை எண்ணிக் கொடுத்தவர் அப்போதைய முதல்வர் இபிஎஸ்.

2019 நாடாளுமன்றத் தேர்தல், அப்போது நடைபெற்ற இடைத்தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் என செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஒட்டுமொத்த அதிமுக வேட்பாளர்களுக்கும் எஸ்.பி.வேலுமணி மூலம் தான் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்ற விமர்சனம் இருக்கும் போது சொந்த சமுதாயத்தைச் சேர்ந்த, அதுவும் அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு தான் வருவதற்காக ஆட்சியின் போதும் இல்லாத போதும் துணையாக இருக்கும் எஸ்.பி.வேலுமணியிடமே கணக்குப் பார்த்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.

இப்படிபட்ட இபிஎஸ்தான், அதிமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருந்தால் மேலும் இரண்டு மூன்று கோடி ரூபாயை கொடுத்திருப்பேனே என்று வருத்தப்பட்ட நிகழ்வும் ஒன்று உண்டு என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பிறகு தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் வழக்குகள் பாய்ந்து விடக் கூடாது என்ற தவிப்பில் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிபாரிசோடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நெருங்கிக் கொண்டிருக்கிறாரே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்(?) ஓபிஎஸ், சட்டப்பேரவையில் துரைமுருகனை எப்படியெல்லாம் பாராட்டி பேசினார் என்பதை மனசாட்சியோடு ரவீந்திரன் துரைசாமி நினைவு கூர்ந்து பார்த்து விமர்சனம் செய்ய வேண்டாமா?

அதிமுகவை துவக்கிய புரட்சித்தலைவர் எம்ஜிஆரை துரோகி என்று பழித்தும், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவை நேரம் கிடைக்கும்போதெல்லாம் கண்ணியக் குறைவாக விமர்சித்தும், அதிமுகவை கிள்ளுக்கீரையாக நினைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் துரைமுருகனை வீழ்த்துவதற்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டோமே என்று வருந்தியவர்தான் இபிஎஸ்.

காட்பாடி தொகுதியில் துரைமுருகனை எதிர்த்து அதிமுகவில் போட்டியிட்டவர் ராமு . நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சாதி பாசத்தில் துரைமுருகன் எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டம்மி வேட்பாளராக ராமுவை களத்தில் இற க்கியவர்.

காட்பாடி தொகுதியில் பெரும்பான்மையானவர்கள்  வன்னியர் சமுதாயத்தைச்  சேர்ந்தவர்கள். இருப்பினும் துரைமுருகன் வாங்கிய வாக்குகள் 85,140. அந்தளவுக்கு சொந்த சமுதாய மக்களிடமே வெறுப்பை சம்பாதித்து வைத்திருப்பவர். அதன் காரணமாகவே அதிமுக வேட்பாளர் ராமுவுக்கு ஆதரவு பெருகி, அவருக்கு 84,394 வாக்குகள் கிடைத்தன. வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில்தான் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதுவும் அரசு ஊழியர்களான அஞ்சல் வாக்குகள்தான் துரைமுருகனின் வெற்றியை தீர்மானித்தது. இதிலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய ராமு, தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்.

காட்பாடியில் துரைமுருகன் வெற்றி பெறுவதே சந்தேகம் என்ற பேச்சு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளின் பிற்பகலில் பரவலாக எழுந்தபோது, ராமுவை தொடர்பு கொண்ட இபிஎஸ், என்னய்யா நீ, துரைமுருகனுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியும் என்று முன்கூட்டியே சொல்லியிருந்தால் கூடுதலாக இரண்டு, மூன்று கோடி ரூபாய் கொடுத்திருப்பேனே என்று கோபப்பட்டவர் இபிஎஸ். அதிமுக போட்டியிட்ட எல்லா தொகுதிக்கும் தலா 10 கோடி ரூபாய் இபிஎஸ் தரப்பில் வழங்கப்பட்டதாக அப்போதே தகவல் வெளியாகியிருந்தது.

2021 காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமு

இப்படி ஒவ்வொரு அதிமுக வேட்பாளரின் வெற்றியும் முக்கியம் என்று கண்ணும் கருத்துமாக உழைத்த இபிஎஸ் எங்கே? தான் போட்டியிட்ட தொகுதியைத் தவிர வேறு எந்தவொரு அதிமுக வேட்பாளருக்கும் ஒத்த பைசா கூட செலவழிக்காத ஓபிஎஸ் எங்கே? பணத்தை விடுங்கள். அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி முக்கியம் என்ற எண்ணத்தோடு பரப்புரை மேற்கொண்டவரா ஓபிஎஸ். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் இபிஎஸ் முதல்வர் ஆகிவிடுவார். கட்சி அவரது கைக்கு போய்விடும் என்ற நரித்தனத்தோடு திமுக வெற்றிக்கு நேரிடையாகவும் அதிமுகவின் தோல்விக்கு மறைமுகமாகவும் பணியாற்றியவர்தானே மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ்.

இப்படிபட்ட தியாகி ஓபிஎஸ்ஸிடம் 50 சதவீதம் கட்சி இருக்கிறதாம். இபிஎஸ்ஸிடம் 50 சதவீதம் கட்சி இருக்கிறதாம். ஆளுக்கு பாதியாகதான் கட்சி இருக்கிறது. அதனால், ஓபிஎஸ் இல்லாத அதிமுகவின் சின்னம் முடக்கப்படும், கட்சியும் முடக்கப்படும் என்பது ரவீந்திரன் துரைசாமியின் ஆரூடம்.

பாவம் அவர். ஒற்றை தலைமை பிரச்னை எழாத வரை இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு மேலாக முட்டுக் கொடுத்து பேசி வந்தவர்தான் ரவீந்திரன் துரைசாமி.

இன்றைய தேதியில் ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிட்டது என்பதால், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற உணர்வுக்கு ஏற்ப, ஓபிஎஸ்ஸை பிரம்மாண்டமான நாயகனாக காட்ட, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்கிறார், சட்ட விதியை மாற்ற முடியாது என்கிறார். தேர்தல் ஆணையம் தலையிடும் என்கிறார். பாஜக மேலிடம் சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்று நரம்பு புடைக்க பேசுகிறார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் இபிஎஸ் கூட்டத்தை அலற விட்டுவிடும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி. பாவம் அவர்..

தியாகத்தின் திருவுருவே…

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் ஒப்பற்ற தலைவரே..

உமது வெற்றிக்காகவே அல்லும் பகலும் உரக்க குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ரவீந்திரன் துரைசாமிக்கு பகல் நேரத்தில் நிம்மதியாக குட்டி தூக்கம் போட வசதியான ஒரு இடத்தை ஏற்பாடு செய்து தந்தால் இபிஎஸ் ஆதரவுக்கூட்டத்தில் கலகத்தை உருவாக்க மேலும் மேலும் கற்பனை குதிரையை விரட்டி விடுவார்.                                                     

2 thoughts on “இபிஎஸ் அணியில் கருத்து மோதல்… கொளுத்திப் போடும் ரவீந்திரன் துரைசாமி…”
  1. உங்கள் பதிவை பார்த்தால் நீங்களே முழுக்க முழுக்க EPS
    ஆதரவாளராக மாறிவிட்டது போன்று தோன்று தோன்றுகிறது

    1. ஹா.. ஹா… எனக்கும் லேசாக தோணியது…

Comments are closed.