Fri. Apr 26th, 2024

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக ஆளும்கட்சியான சிவசேனாவில் இருந்து குழுவாக பிரிந்து சென்ற அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அம்மாநிலத்தின் முதல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைமையிலான அரசில் பங்கேற்றாமல் பாஜக வெளியில் இருந்து ஆதரவு தரப்போவதாக முதலில் தெரிவித்தபோதும், அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டாவின் அறிவுரையை ஏற்று ஆட்சியில் பங்கேற்கவுள்ளதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாஸ் தெரிவித்துள்ளார்..

அம்மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால் முதல் அமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் சிவசேனா குறியாக இருந்ததால், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து உத்தவ் தாக்ரே தலைமையில் புதிய அரசு அமைந்தது.

மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பாஜக சிவசேனா கூட்டணிக்கு எதிரான நிலையை எடுத்த உத்தவ் தாக்ரே, மகாராஷ்டிரா மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டிய அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஏக்நாத் ஷின்டே, சிவசேனா கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் 40 பேருடன் சேர்ந்து உத்தவ் தாக்ரே தலைமையிலான ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

பெரும்பான்மையை இழந்துவிட்ட நிலையில் அம்மாநில ஆளுநர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்ரே வழக்கு தொடர்ந்தார். அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனையடுத்து நேற்றிரவு முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்ரே விலகியதை அடுத்து, ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பாஜகவுக்கு தனிப்பட்ட முறையில் 120 எம்எல்ஏக்கள் இருந்த போதும், சிவசேனாவின் அதிருப்தி பிரிவின் தலைவரான ஏக்நாத் ஷிண்டேவை முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்தது. சுயேட்சை மற்றும் சிவசேனா எம்எல்ஏக்கள் என 50 பேரின் ஆதரவு மட்டும் இருந்த போதும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைகிறது.

இந்த அரசில் பாஜகவும் இணைந்துள்ளது என்று மகாராஷ்டிரா பாஜக தெரிவித்துள்ளது. உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசை கவிழ்ந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஏக்நாத் ஷின்டே, சிவசேனாவின் நிறுவனரான பால்தாக்ரே தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்த காங்கிரஸ் கட்சியுடனும், இந்து மத எதிர்ப்பாளர்களுடனும் உத்தவ் கூட்டணி அமைந்ததால், மகாராஷ்டிரா மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அதன் காரணமாகவே அவரது தலைமையிலான ஆட்சியில் இருந்து விலகினோம் என்று தெரிவித்துள்ளார்.

மும்பை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், முதல் அமைச்சராக ஏக்நாத் ஷின்டேவும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாஸும் பதவியேற்றுக் கொண்டனர்.