Thu. Nov 21st, 2024

ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு  தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களான பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் கலந்துகொண்ட பொதுக்குழுக் கூட்டத்தை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பொதுக்குழுக் கூட்டடத்தை சட்ட விரோதமானது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் சட்டவிரோதமானது என்று கூறி அப்போது வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் அவரவர் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஆதரவாளரான சண்முகம் என்பவர், வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவுகளை மீறி பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களை நிராகரித்ததையடுத்து, இபிஎஸ் தரப்புக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தாக்கல் செய்தார்.

இவ்விரு மனுவும் நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ஜூலை 11ல் நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரியதையும் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜூலை 11ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாகவும் நீதிபதி துரைசாமி அமர்வு தெரிவித்துள்ளது.