தமிழக கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் என ஆன்றோர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இல்லங்களைத் தேடிச் சென்று சிறார்களுக்கு கல்வியை கற்பிக்கும் இந்தத் திட்டத்திற்கு பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால், அண்மைகாலமாக, இந்த திட்டத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இல்லம் தேடிக் கல்வித் திட்டம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தின் பொறுப்பாளரான இளம் ஐஏஎஸ் அதிகாரியான இளம் பகவத், தன்னார்வலர்களை மாவட்டந்தோறும் நேரடியாக தேர்ந்தெடுக்காமல், அந்த பொறுப்பை தனியார் தொண்டு நிறுவனங்களிடம் வழங்கிவிட்டார் என்றும் அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தார்கள் என்றும் அவர்கள் முறையாக இல்லங்களைத் தேடிச் சென்று சிறார்களுக்கு கல்வி கற்கும் பணியை ஆர்வமுடன் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் தன்னார்வலர்களுக்கு கடந்த மூன்று மாதமாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் கற்பித்தல் தன்னார்வலர்களாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.1000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்!
இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. வேறு வேலை செய்யாத பலருக்கு அது தான் வாழ்வாதாரம். அதையும் குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது நியாயமல்ல!
இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் செய்வது சேவை ஆகும். அவர்களில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது. அவர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.