Mon. May 6th, 2024

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், விசா முறைகேடு வழக்கில் தன்னை அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சீனா விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அவருக்கு சொந்தமான டெல்லி, சென்னை உள்ளிட்ட 17 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மீண்டும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கியது.
இதனையடுத்து, தன்னை அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருப்பதற்காக கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. மேலும் விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை இல்லை என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முனைப்பு காட்டி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.