தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், கலைஞர் எழுதுகோல் விருது, கலைத்துறை வித்தகர் விருது மற்றும் கனவு இல்ல திட்டத்தின்படி சிறந்த தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருது மற்றும் செம்மொழி தமிழாய்வு விருது பெற்ற தமிழ் அறிஞர்களுக்கு அவரவர் தேர்ந்தெடுத்த குடியிருப்பு மனைகளுக்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படாத, கனவுக் கூடாத மிக உயரிய திட்டமான கனவு இல்லத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முதல்முறையாக செயல்படுத்தியுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை மறைந்த முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்தநாளான இன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
கலைஞர் எழுதுகோல் விருது…
தினத்தந்தி நாளிதழில் 70 ஆண்டு காலம் பணியாற்றி வரும் முதுபெரும் ஊடகவியலாளர் ஐ.சண்முகநாதனுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.விருதுடன் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்.
கனவு இல்லத் திட்ட வீட்டு மனைகள்….
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, திரைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருது வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
திரையுலகில் வசனத்தில் தனி முத்திரை பதித்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்தநாளான இன்று திரைத்துறையில் நீண்ட நெடிய அனுபவம் பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். உடல் நலிவுற்றுள்ள ஆரூர்தாஸை, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைத்துறை வித்தகர் விருதை வழங்கினார். மேலும், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கப்பட்டது.