சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்டவர் கார்த்திக் கோபிநாத். பாஜக ஆதரவாளரான இவர், இளைய பாரதம் என்ற பெயரிலான யூ டியூப் மூலம் பாஜகவுக்கு ஆதரவாக பேசி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றார். யூ டியூப் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையுடன் நெருங்கிப் பழகினார். இதனையடுத்து, தமிழகத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தொடர்ச்சியாக ஒன்றிய பாஜக அரசின் அமைச்சர்களோடு கிடைத்த அறிமுகத்தை மூலதனமாக்கி, தெய்வப் பணிகளில் ஈடுபடுவதாக பரப்புரை மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள புகழ் வாய்ந்த மதுர காளியம்மன் கோயிலை சீரமைப்பதாக கூறி ரூ. 50 லட்சம் அளவுக்கு இணையத்தளம் வழியாக வசூலித்த கார்த்திக் கோபிநாத், வாக்குறுதி அளித்த படி திருப்பணிகளை மேற்கொள்ளாமல், நன்கொடையாக கிடைத்த பணத்தை முறைகேடாக செலவழித்து வருவதாகவும், பணத்தை திருப்பணிக்காக செலவிடாமல் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் கார்த்திக் கோபிநாத்திற்கு எதிராக புகார்கள் கூறப்பட்டன.
இந்த கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில் திருப்பணி குறித்தோ, நிதி வசூல் செய்வது தொடர்பாக, அறநிலையத்துறையிடம் முன்அனுமதி எதையும் கார்த்திக் பெறவில்லை என்றும் புகார் கூறுப்பட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கார்த்திக் கோபிநாத் மோசடிகள் குறித்து சமூக ஊடகங்களில் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, மதுர காளியம்மன் கோயில் நிர்வாகி அரவிந்தன், கார்த்திக் கோபிநாத்திற்கு எதிராக ஆவடி மாநகர காவல் ஆணையரின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றப்பரிவு காவல் அதிகாரிகள் இன்று காலை கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர். அவருக்கு எதிராக நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததுடன் முறைகேடில் ஈடுபட்டதற்கான ஆவணங்களை சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவரையும் நீதிபதி முன்பு நேர்நிறுத்தினர்.
விசாரணையில் முடிவில் கார்த்திக் கோபிநாத்தை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, கார்த்திக் கோபிநாத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.