Thu. Nov 21st, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கலைஞர் மு.கருணாநிதி திறப்பு விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

இந்தியாவின் பெருமைமிகு முதல்வர்களில் ஒருவர் கருணாநிதி; அவரின் சிலையை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்ற குறள் கருணாநிதிக்கு பொருந்தும் .

இந்தியாவில் ஆற்றல் வாய்ந்தவர்களில் முதன்மையானவர் கலைஞர். அடித்தட்டு மக்களின் நலனையே நோக்கமாகக் கொண்டு பாடுபட்டவர் கலைஞர்; மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கியவர்; நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் கலைஞரும் ஒருவர்! தமிழ், தமிழ் காலச்சாரத்தை பெரிய அளவில் ஊக்குவித்தவர் கருணாநிதி; மக்களை நடுநாயகமாகக் கொண்ட அரசியலை முன்னெடுத்தவர் கருணாநிதி.

என்னுடைய அரசியல் பயணத்தில் மிக நீண்ட காலம் கருணாநிதியுடன் பயணித்திருக்கிறேன்; சென்னை என்னுடைய மனதிற்கு நெருக்கமான இடமாகும்.என்னுடைய இளம் வயதில் கருணாநிதியின் உரைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்; அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி,

தமிழ் தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி. விவசாயிகள் நலனுக்காக உழவர் சந்தையை நிறுவியவர் கருணாநிதி; கருணாநிதியின் முழு உருவச்சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது!

தாய்மொழியின் வளர்ச்சிக்கு இன்றைய இளைஞர்கள் பாடுபட வேண்டும்; உங்களுடைய வீடுகளில் தாய்மொழியிலேயே பேசுங்கள் -மம்மி..டாடி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்; அம்மா… அப்பா என்று இதயத்தில் இருந்து பெற்றோர்களை அழையுங்கள் –

மொழி திணிப்பு கூடாது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. நமது நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தன்மை கொண்டது. ஒவ்வொருவருக்கும் தாய் மொழி என்பது கண் பார்வைக்கு சமமானது. பிற மொழிகளை மக்களிடம் திணிக்கக் கூடாது; எந்த மொழியையும் அடக்கவோ, ஒடுக்கவோ கூடாது! தாய் மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல எனது மொழிக்கு நான் ஆதரவானவன்; தமிழக மக்கள் தங்களின் கலை, கலாச்சாரத்தை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்

ஒவ்வொருவருக்கும் தாய் மொழி என்பது பார்வைக்கு சமமானது; பார்வை இழந்தால் எப்படி எதுவும் தெரியாதோ, அதுபோன்ற நிலையே தாய் மொழியை இழந்தால் ஏற்படும். உலக நாடுகள் பலவற்றிக்குப் போனாலும் நான் இந்த வேட்டி, சட்டை உடையை உடுத்துகிறேன்; பல நாட்டு மக்களும் என்னுடைய உடையை பாராட்டுகின்றனர்!

இந்தியாவில் சக்தி வாய்ந்த முதலமைச்சர் ஸ்டாலின். இந்த விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பல நண்பர்களை இந்த விழாவில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.இதுதான் கலாச்சாரம். இதுதான் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா.

இவ்வாறு குடியரசுத் துணைத்தலைவர் பேசினார். விழாவின் நிறைவில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நன்றி கூறினார்.