Sat. Apr 20th, 2024

கலைஞர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு தலைமை வகித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விழாவில் பேரூரை ஆற்றினார். அவர் பேசியதாவது:

வாழ்வில் ஒரு பொன்னாள் என்று எந்நாளும் போற்றும் வகையில் இந்த நாள் அமைந்துள்ளது. தமிழ்நாட்டை, தமிழ் இனத்தை, தமிழ் நிலத்தை வான் உயரத்திய முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நம்முடைய நன்றியின் அடையாளமாக தமிழினத் தலைவருக்கு இந்த மாபெரும் சிலை எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலையை உயர்த்த பாடுபட்டவர் என்பதால்தான் முத்தமிழ் கலைஞருக்கு தமிழ்நாடு முழுவதும் சிலை எழுப்பப்பட்டு வருகிறது. இன்று எழுப்பட்டிருக்கும் சிலைக்கு உள்ள சிறப்பு என்னவென்றால் தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவுக்கும் இடையே இந்த சிலை மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.


தந்தை பெரியாரின் ஈரோட்டு பள்ளியில் படித்தவர், பேரறிஞர் அண்ணாவின் காஞ்சி கல்லூரியில் படித்தவன் என்று தன்னைப் பற்றி அடிக்கடி கலைஞர் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். அதற்கு ஏற்பவே, பெரியாருக்கும் பேரறிருக்கும் இடையே கலைஞர் சிலை அமைந்திருக்கிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால் முத்தமிழ் அறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்டதுதான் ஓமந்தூரார் தோட்டத்தின் மாபெரும் கட்டிடம்.


தமிழ்நாடு சட்டப்பேரவைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் தற்போது மருத்துவமனையாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அதைக் கம்பீரமாக கலைஞரின் கனவுக் கோட்டையாகவே எழுந்து நிற்கிறது. அதனால்தான் இங்கு அவரின் சிலை எழுப்பப்பட்டு இருக்கிறது. சிலையை திறந்து வைத்திருக்கக் கூடிய இந்த விழா, நடக்க கூடிய இடம் கலைவாணர் அரங்கமாகும். ஒருகாலத்தில் பாலர் அரங்கம் என்றிருந்தது. அதனை பிரம்மாண்டமாக கட்டியெழுப்பி கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியவரும் நம்முடைய கழக தலைவர்தான். இத்தகையாக சிறப்பான விழாவுக்கு மகுடம் வைப்பதுபோல இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வருகை தந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலையை திறந்து வைத்திருக்கிறார். நம்முடைய நட்புக்குரிய இனிய நண்பராகதான் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் எப்போதும் இருந்து வருகிறார்.


அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டு காட்டியதைப் போல, 2001 ஆம் ஆண்டு மிக கொடூரமாக நம்முடைய தலைவர் தாக்கப்பட்டு அன்றைய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டபோது அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனும் பிரதமராக இருந்து வாஜ்பாயும் துடிதுடித்துப் போனார்கள். அப்போது அன்றைய ஆட்சியாளர்களைக் கடுமையாக கண்டித்து கடுமையாக விமர்சித்தவர்தான் இங்கு வந்திருக்கக் கூடிய வெங்கைய்யா நாயுடு அவர்கள். அதே நட்பை இன்றும் பேணி வரக்கூடியவராக இருக்கிறார்.
தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைக்க யாரை அழைக்கலாம் என்று நாங்கள் சிந்தித்த நேரத்தில் குடியரசுத் துணைத் தலைவர் முகம்தான் எங்கள் நெஞ்சில் தோன்றியது. அவரை நேரில் சந்தித்து கேட்டப்போது மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார். இந்திய குடியரசுத் துணைத் தலைவர் மிகச்சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகவாதி என்று பெயரெடுத்தவர். மாநிலங்களவையில் கொந்தளிப்பு ஏற்பட்டபோது சிறப்பாக கையாண்டவர். எனவேதான், கலைஞர் சட்டப்பேரவையில் 60 ஆண்டுகள் பணியாற்றிதற்கு எத்தகையாக திறமைகள் வேண்டும் என்பது குடியரசுத் துணைத் தலைவருக்கு தெரியும். இன்று கலைஞரின் சிலையை அவர் திறந்து வைப்பது மிக,மிக,மிக சாலப் பொருத்தமாகும்.


குடியரசுத் துணைத் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவியில் இருந்து வரும் நேரத்தில் நம்முடைய தலைவர் சிலையை திறந்து வைத்திருப்பது என்பது இன்னும் சிறப்பான நிகழ்வாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தலைவர் கலைஞர் திருவுருப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். தலைவர் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறந்து வைத்திருக்கிறார். இந்திய நாட்டின் பிரதமர்களை உருவாக்கியவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர். குடியரசுத் துணைத் தலைவர் பலரை உருவாக்கியவர் கலைஞர். இந்தியாவில் நிலையான ஆட்சியை உருவாக்குவதற்கு துணை நின்றவரும் முத்தமிழ் அறிஞர். தமிழ்நாட்டில் ஐந்துமுறை முதல் அமைச்சராக இருந்து இன்றைய நவீன தமிழகத்தை உருவாக்கியவரும் நமது தலைவர்தான். அத்தகைய மாமனிதருக்குதான் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. திமுக முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நேரத்தில் கலைஞர் சொன்னார், ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசுக் கட்டிலில். இனி ஏழைக்கு வாழ்வு வந்தது என்று தலைப்புச் செய்தியாக முரசொலியில் கலைஞர் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்.


பேரறிஞர் பெருந்தகை அண்ணா இரண்டு ஆண்டுகள் தான் ஆட்சியில் இருக்கும் வகையில் இயற்கை அனுமதித்தது. அதன் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்று தன்னுடைய இறுதி மூச்சு வரை இந்த இயக்கத்தை காப்பாற்றியவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர். நம் தலைவர் பன்முகத் திறமை கொண்டவர். எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அந்த துறையில் கோலோச்சியவர் கலைஞர். இலக்கியத்தில் அவர் படைத்த படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாதவை. திரையுலகத்தில் இன்றும் பராசக்தி, மனோகரா, பும்புகார் வசனங்கள் காற்றில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
என்னுடைய பாசமிகு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்திருக்கிறார். அவர் நன்கு அறிவார். திரையுலகத்திற்குள் வருபவர்கள் கலைஞரின் வசனத்தை நன்கு பேசி, அதில் தங்கள் திறமைகளை நிரூபித்து உள்ளே நுழைந்தவர்கள் என்பது வரலாறு. அரசியலிலும் ஒரு இயக்கத்திற்கு தலைமையேற்று 50 ஆண்டுகள் வழிநடத்தியவர் ஒரே தலைவர் கலைஞர்தான். ஆட்சி பொறுப்பிலும் இன்றைக்கு நாம் காண்கிற நவீன தமிழகத்தை கலைஞரால் உருவாக்கப்பட்டதுதான். அதற்கான தொலைநோக்கு பார்வை அவருக்கு இருந்தது. அதற்கான உள்ளார்ந்த அக்கறை அவருக்கு இருந்தது. ஏனென்றால் தமிழ்நாட்டில் அடக்கி ஒடுக்கிய மக்களின் விடியலுக்காக பாடுபட்டவர் கலைஞர். அத்தகையாக மக்களுக்காக எழுதினார், பேசினார், போராட்டங்களை முன்னெடுத்தார், அவர்களுக்காக சிறையில் இருந்தார். ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் அவர்களுக்காக திட்டங்களை தீட்டினார். அந்த திட்டங்களால் உருவானதுதான் இந்த தமிழ்நாடு. அதனால்தான் அவரை ஃபாதர் ஆஃப் தமிழ்நாடு என்று நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று இன்றைக்கும் அழைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் உருவாக்கிய கல்லூரிகளில் படித்தவர்கள், அவரால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள், அவரால் காப்பாற்றப்பட்ட சமூக நீதியால் உயர்வு பெற்றவர்கள், அவர் அறிமுகப்படுத்திய இலவச மின்சாரத் திட்டத்தால் மண்ணை செழிக்க வைத்த உழவர் பெருமக்கள் , தொழில் வளாகங்களால் வேலை பெற்றோர் என எண்ணற்ற திட்டங்களால் என தாய் திருநாட்டின் திரும்பிய பக்கமெல்லாம் நலத்திட்டங்களால் கோடிக்கணக்கானவர்களுக்கு பயனளித்த வான்போற்றும் வள்ளல்தான் நம்முடைய தலைவர்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.