Wed. Apr 24th, 2024


பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளை வீழ்த்திவிட்டு, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் பகவத் மான் தலைமையிலான ஆட்சி, நேர்மையான ஆட்சியை வழங்கும் என புதிதாக அமைச்சரவை பதவியேற்ற போதே வாக்குறுதியை அளித்தது.
மான் தலைமையிலான பஞ்சாப் அரசில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய் சிங்லா பணியாற்றி வரும் நிலையில், அவர் துறை சார்ந்த மருந்து கொள்முதல் உள்ளிட்ட அனைத்து வகையிலான ஒப்பந்தங்களுக்கும் ஒரு சதவீதம் கமிஷன் தொகை கேட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் சிங்லா நடந்து கொண்டது உறுதியானது. இதனையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சிங்லாவை நீக்கி பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் உத்தரவிட்டுள்ளார

அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட விஜய் சிங்லா
அமைச்சர் பதவி பறிப்பு தொடர்பாக முதல்வர் மான் வீடியோ மூலம் பஞ்சாப் மக்களுக்கு முக்கியமான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக தான் கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளேன். அமைச்சரவையில் இருந்து சிங்லாவை நீக்கியுள்ளேன். முறைகேடில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்து எதிர்கட்சிகள் மேற்கொண்டு பிரசாரம் குறித்து தான் கவலைப்படவில்லை. ஆம் ஆத்மி அரசு பஞ்சாபில் பதயியேற்ற 2 மாதத்திற்குள் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஊழல் விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் உறுதிபட கூறியுள்ளார் என்று முதல்வர் மான் காணொளி வாயிலாக அமைச்சர் பதவி பறிப்பு குறித்து நாட்டுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஊழல் புகாரில் அமைச்சர் ஒருவர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பஞ்சாபில் மட்டுமல்ல நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.