Sun. May 5th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித்தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 68 வது பிறந்தநாள் விழா சேலத்தில் நேற்று முன்தினம் களைகட்டியது. பிறந்தநாள் வாழ்த்துகளை நேரில் தெரிவிப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் பலர் சேலத்திற்கு வந்திருந்தபோதும் அவருக்கு விசுவாசமான, நம்பிக்கைக்குரிய முக்கியமான, மூத்த முன்னாள் அமைச்சர்கள் பலர் சேலம் பக்கமே தலை வைத்து படுக்காதது மட்டுமல்ல, தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்களில்  ராஜலெட்சுமியைத் தவிர ஒருவர் கூட இபிஎஸ்ஸுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லாதது அன்றைய தினமே அதிமுக உட்கட்சிக்குள்ளேயே சூடான விவாதத்தை கிளப்பியது.

சமூக ஊடகங்களிலும் இபிஎஸ்ஸின் பிறந்தநாள் விழாவை தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டனர் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கிவிட்டது என்றும் தகவல்கள் வெளியிட்டு, இரட்டைத் தலைமைக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பனிப்போரை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களில் பலர் தனக்கு விசுவாசமானவர்களாக இல்லை என்பதை ஒப்புக் கொள்ளும் விதமாக இபிஎஸ் வெளியிட்ட நன்றி அறிக்கையே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்கிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.  

கே.பி.முனுசாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன், கே.சி.கருப்பண்ணன், எம்.சி.சம்பத், பா.பென்ஜமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் மட்டுமே நேரில் சந்தித்து இபிஎஸ்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சேலத்தையொட்டி உள்ள ஈரோடு கே.ஏ.செங்கோட்டையன், தர்மபுரி கே.பி.அன்பழகன், ஜோலார்பேட்டை கே.சி.வீரமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், விழுப்புரம் சிவி சண்முகம், ஜெயக்குமார், திருச்சி வெல்லமண்டி நடராஜன் ஆகியோரும் இபிஎஸ்ஸுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கவில்லை. இந்த 7  பேரில் கே.ஏ.செங்கோட்டையனைத் தவிர மற்ற ஆறு  பிரமுகர்களுமே எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் மன்னார்குடி கூட்டத்திற்கு அதிமுகவில் இடம் இல்லை என்ற திட்டத்தை தீவிரமாக ஆதரிப்பவர்கள்.

மேலும் சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் கூட இபிஎஸ்ஸுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வரவில்லையே, ஏன்? என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள்.  இபிஎஸ் முதல்வராக இருந்த போது சென்னை மாவட்ட  அதிமுக செயலாளர்கள் அவரின் செல்லப்பிள்ளைகள் போல் அதிக செல்வாக்குடனும் நினைத்தையெல்லாம் சாதித்தும் கொண்டவர்கள் என்கிறார்கள்.

வடக்கு, மேற்கு மாவட்ட முன்னாள் அமைச்சர்களே இபிஎஸ் பிறந்தநாள் விழாவை ஒரு பொருட்டாக மதிக்காதபோது, தென் மாவட்ட பிரமுகர்களும் மனமாறியிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கிறார்கள் வேதனையோடு. முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், திருவாரூர் காமராஜ்,  மதுரை செல்லூர் ராஜு, உதயகுமார், விருதுநகர் ராஜேந்திர பாலாஜி, நாகை ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் இபிஎஸ்ஸுக்கு நேரில் வாழ்த்துச் சொல்லவில்லை.

இந்தக் கூட்டத்தில் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், விருதுநகர் ராஜேந்திர பாலாஜி, திருவாரூர் காமராஜ் ஆகியோர் துறை ரீதியாகவும், உட்கட்சிக்குள்ளும் எதிர்ப்புகளை சந்தித்த போதும், மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்கிய நேரங்களிலும் இபிஎஸ் டெல்லி மேலிட செல்வாக்கு மூலம், அவர்களை காப்பாற்றியவர் என்று கூறும் அதிமுக முன்னணி தலைவர் ஒருவர், இக்கட்டான நேரங்களில் எல்லாம் துணை நின்ற இபிஎஸ்ஸுக்கு விசுவாசமாகவும், நன்றி இல்லாதவர்களாகவும் மாறி போகும் அளவுக்கு அவர்களை மாற்றிய சக்தி யார் என்பது எங்களுக்கு தெரியும் என்றும் புலம்புகிறார்கள்.

இவர்களைத் தவிர கடம்பூர் ராஜு, இபிஎஸ்ஸின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர். தென் மாவட்டங்களில் இபிஎஸ்ஸின் குரலாகவே ஒலித்தவர். அந்தளவுக்கு தீவிர விசுவாசியான அவரே சேலத்திற்கு வந்து பிறந்தநாள் வாழ்த்துகளை நேரில் தெரிவிக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது என்கிறார்கள் இபிஎஸ் விசுவாசிகள்.

சேலத்தில் இபிஎஸ்ஸின் நம்பிக்கையை பெற்ற நிர்வாகிகள் பலர் இருக்கும் போது, சேலம் இளங்கோவனுக்கு மட்டுமே அதீத முக்கியத்துவம் ஏன் கொடுக்கிறார் இபிஎஸ் என்ற கேள்விக்கும் பிறந்தநாள் அன்று விடை கிடைத்ததாக கூறும் அதே நிர்வாகிகள், இபிஎஸ்ஸுக்கு நேரில் வாழ்த்துச் சொல்ல வெளிமாவட்டங்களில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் ஆகியோரை உரிய மரியாதை கொடுத்து வரவேற்றது முதல் உபசரிப்பு, வழியனுப்பி வைத்தல் என ஒவ்வொரு விஷயத்திலும் சேலம் இளங்கோவன் எடுத்துக் கொண்ட சிரத்தையைப் போல வேறு ஒரு நிர்வாகியால் செய்ய முடியுமா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.

இபிஎஸ்ஸின் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்காக சேலம் இளங்கோவன் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. இபிஎஸ் ஆட்சிக்காலத்தில் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் பலன் அடைந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் என ஒருவர் விடாமல் கைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து சேலத்திற்கு வரவழைக்க சேலம் இளங்கோவன் உழைத்த உழைப்பை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது என்று கூறும் இபிஎஸ் விசுவாசிகள், கடந்த பிறந்தநாள் விழா அன்று இருந்த எழுச்சி, இந்தாண்டு பிறந்தநாள் விழாவில் காண முடியவில்லை என்பதும் ஒற்றை தலைமையை நோக்கி காய் நகர்த்தி வரும் இபிஎஸ், தனது குறிக்கோளை அடைவது அத்தனை எளிதல்ல என்பதையும் தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்கள்,  மாவட்டச் செயலாளர்கள், அதிமுக எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையானோரின் புறக்கணிப்பால் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று வேதனையோடு கூறுகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக, இபிஎஸ்ஸின் பிறந்தநாள் விழா வெற்றியடைந்துவிடக் கூடாது என்று ஓபிஎஸ் ஏதாவது திட்டம் போட்டிருந்தால், அதில் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல முடியும் என்று ஒப்புதல் வாக்குமூலமாகவே கூறுகிறார்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள்.

மகிழ்ச்சிக்கரமாகவும், கொண்டாட்டமாகவும் அமைய வேண்டிய பிறந்தநாள் விழா, வெளிப்பார்வைக்கு வெற்றி விழாவாக அடையாளப்படுத்தப்பட்டாலும், இபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு பெரிய அளவில் மனவருத்தத்தை தரும் வகையிலேயே அமைந்துவிட்டது.

அதிமுகவில் தனது ஆதரவுக் கூட்டம் குறைந்ததைவிட மிகப்பெரிய மனவருத்தத்தை இபிஎஸ்ஸுக்கு ஏற்படுத்தியிருப்பது பிரதமர் மோடியிடம் இருந்து வாழ்த்துச் செய்தி வராததுதான். கடந்த ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள், தற்போது இபிஎஸ்ஸுக்கு கைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காதது மட்டுமல்ல, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் கூட பதிவு போடாததுதான், இபிஎஸ்ஸுக்கு அதிகளவு மனவருத்தத்தை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள்.

மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்க்கும் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த மார்ச் 1 ஆம் தேதி கைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாமல் விட்டது ஏன் என்று இபிஎஸ் வருத்தப்பட்ட நேரத்தில், பிறந்தநாளை மறந்து கூட போயிருக்கலாம் என ஆறுதலாக கூறியபோதும், இபிஎஸ் சமாதானமடையவில்லை என்கிறார்கள்.

பிரதமர் மோடியை சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது. தனிமனிதர் ஒருவரால் தனக்கு ஆதாயம் என்று தெரியவந்தால்கூட, ஈகோ பார்க்காமல், விமர்சனங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளிப்படையாக, துணிந்தே வாழ்த்துகளை, ஆதரவை வெளிப்படுத்துபவர் பிரதமர் மோடி.

2019 ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி. அவரது சொல்பேச்சைக் கேட்டு நடக்கும் இபிஎஸ் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில். அன்றைய காலக்கட்டத்தில் விகே சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஒட்டுமொத்தமாக அதிமுக அரசு விலக்கி வைத்திருந்தது. அப்படிபட்ட சூழலில், ஜெயா தொலைக்காட்சி 25 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடிய போது, அதற்கு வாழ்த்து மடல் அனுப்பியவர் பிரதமர் மோடி. அதை பார்த்து அதிர்ச்சியடைந்து பிரதமர் மோடியின் ராஜதந்திரத்தை புரிந்து கொள்ளாமல் அவதிப்பட்டோம்.

அந்த நேரத்தில் மன்னார்குடி குடும்பத்தால் பாஜகவுக்கோ, மத்திய அரசுக்கோ ஒரு பயனும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு ஆதரவாக நின்றாலே, பொதுவெளியில் அவமானம்தான் ஏற்படும் என்று தமிழ்நாட்டில் இருப்பவர்களே ஒதுங்கி நின்ற போது, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்தவர் பிரதமர் மோடி.

அன்றைக்கு ஜெயா டிவி, அதனை நிர்வகிக்கும் மன்னார்குடி கும்பல் பிரதமர் மோடிக்கு முக்கியமானதாக தெரிந்த போது, 66 எம்எல்ஏக்களை வைத்து உள்ள பிரதான எதிர்க்கட்சியின் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி கூட அனுப்பாமல் புறக்கணித்துவிட்டார் பிரதமர் மோடி என்றால், இபிஎஸ்ஸை ஒட்டுமொத்தமாக கைகழுவி விட்டாரா? என்ற சந்தேகம்தான் எங்களை எல்லாம் தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது என்று புலம்புகிறார்கள் இபிஎஸ் விசுவாசிகள்.