Sat. May 18th, 2024

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அமைச்சர் என்னவோ மா.சுப்பிரமணியன்தான். ஆனால், ரஜினி நடித்த படையப்பா படத்தில் வருகிற காமெடி சீனைப் போல, மாப்பிள்ளை இவருதான்..ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னுது என்று சொல்வதைப் போல சுகாதாரத்துறைக்கு அமைச்சர் மா.சு தான். ஆனா நாங்க நினைச்சுதுதான் நடக்கும்னு உதார்விட்டு கொண்டிருப்பவர்கள் நிறைந்த பிரிவாக இருக்கிறது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது காதாரத்துறை இயக்குனர் அலுவலகம்.

மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள் வரையிலான மருத்துவ சேவை அமைப்புகள் அனைத்தும் இந்த துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்தத் துறையின் (டிபிஹெச்)இயக்குனரான செல்வவிநாயகம் அடக்கி வாசித்தாலும், அவரின் கீழ் பணிபுரியும், கூடுதல் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை என்று குமறுகிறார்கள் இயக்குனர் அலுவலக அதிகாரிகள்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

அமைச்சர் மா.சுப்பிரமணியம் தர்ம நியாயத்திற்கு கட்டுப்பட்டு நேர்மையாக நடந்து கொண்டு வரும் நேரத்தில், அவருக்கே தெரியாமல், சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த பல மாதங்களாக அடித்து வரும் கொள்ளைகள் குறித்து அவ்வப்போது நல்லரசுவில் சிறப்புக் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. அதன்பேரிலும் அரசு மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் என பல்வேறு தரப்பினரின் புகாரின் பேரிலும் துறைச் செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, துறையில் வாலாட்டும் அதிகாரிகள் பலரின் கொட்டத்தை முழுமையாக அடக்கி வருகிறார் என்ற தகவல்கள் நிம்மதியை தருகின்றன.

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்..

ஆனால், டாக்டர் ராதாகிருஷ்ணனின் அதிரடி நடவடிக்கைகளுக்கும் பயப்படாமல் முதல்வரின் குடும்ப உறவுகளின் பெயரைச் சொல்லி, கோடிக்கணக்கில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார் இணை இயக்குனர் (Joint Director) சம்பத் என்று புகார் பட்டியல் வாசிக்கின்றனர் அவரால் பாதிக்கப்பட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர். தற்போதைய இயக்குனர் செல்வநாயகம் விரைவில் மாற்றப்படுவார். அடுத்த இயக்குனர் தான் தான் என்று அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் இணை இயக்குனர் சம்பத்தின் அதட்டல் அண்மைகாலமாக கொஞ்சம் தூக்கலாக இருக்கிறதாம்.

கொள்ளை நோய் பிரிவை மட்டுமே கவனித்து வந்த சம்பத், தற்போது கூடுதலாக கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்கள் மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டை கவனிக்கும் பொறுப்பையும் தன் வசப்படுத்திக் கொண்டு மாவட்டங்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து சுகாதார அலுவலர்களை (ஹெல்த் ஆபிஸர்ஸ்) உருட்டி மிரட்டி பணம் பறித்து வருகிறார் என்று குமறுகிறார்கள்.

ஆய்வுப் பணி என்று கூறிக்கொண்டு அடிக்கடி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இணை இயக்குனர் சம்பத், சுகாதார அலுவலர்களுக்கு வைக்கும் செலவை கண்டு மிரண்டு கிடக்கிறார்கள் பலர். அசைவ உணவு, தங்கும் விடுதி செலவு, போக்குவரத்து செலவு என பல ஆயிரம் ரூபாயை ஒவ்வொரு முறையும் தங்கள் சொந்த காசில் இருந்து செலவழிக்கும் சுகாதார அலுவலர்கள், கூனிப்போகும் சில காரியங்களையும் செய்ய நிர்பந்திக்கப்டுவதாகவும் கண்ணீர் சிந்துகிறார்கள்.

இணை இயக்குனர் சம்பத்…

சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து சூடாக மாவட்டங்களுக்கு கிளம்பும் சம்பத், தன்னை குளிர்விக்கும் வகையில் சில சேவைகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பதுதான் அந்த துறையின் இளம் அலுவலர்களான ஹெல்த் ஆபிசர்ஸை அவமானப்படுத்தும் செயலாக இருக்கிறது என்கிறார்கள் சம்பத்திற்கு நெருக்கமான அலுவலர்கள்.

துறை அமைச்சர், துறைச் செயலாளர், துறை இயக்குனர் என மூன்று அதிகார மையங்களுக்கு கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் சம்பத்தின் உச்சபட்ச கொடூரச் செயல்,   பத்துக்கும் மேற்பட்ட இளம் சுகாதாரத்துறை அலுவலர்களுர்களுக்கு (சீனியர் ஹெல்த் ஆபிசர்ஸ்) ஆசை வார்த்தை கூறி, மாவட்ட துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று தருவதாக மோசடி நாடகம் நடத்தி தலா  10 லட்சம் ரூபாய் வீதம் லஞ்சமாக பெற்று ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்துவிட்டார் என்றும் சீனியர் ஹெல்த் ஆபிசர்ஸ்ஸிடம் உரிய விசாரணை நடத்தினால் சம்பத்தின் வசூல் வேட்டை அம்பலமாகிவிடும் என்றும் சம்பத்திற்கு எதிராக கோபக் கணைகளை வீசுகிறார்கள் அவரது மேல் அதிகாரிகள்.

சுகாதாரத்துறைச் செயலாளர், அமைச்சர் மற்றும் இணை இயக்குனர் சம்பத்

கடந்த 6 மாத காலத்தில் சம்பத் எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆய்வுக்காகச் சென்றார். அங்கு எல்லாம் என்ன மாதிரியான பணிகளை மேற்கொண்டார் என்பதை குறித்து விசாரணை நடத்தினால், இவரால் பாதிக்கப்பட்ட சுகாதார அலுவலர்களின் பரிதாப கதைகளும்,  கோயம்புத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் திரும்ப திரும்ப சென்று வந்ததின் மர்மம் என்ன என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வருவதுடன், இணை இயக்குனர் பதவியை பயன்படுத்தி  பகல் கொள்ளையில் ஈடுபட்டது குறித்தும் வெட்ட வெளிச்சமாகும் என்கிறார்கள் டிபிஹெச் அதிகாரிகள்.

ஜெ.டி.சம்பத்தின் அனைத்து விதமான அதிகார துஷ்பிரயோகத்திற்கும் உறுதுணையாக இருப்பவர் டிபிஹெச்சில் பணியாற்றி வரும் சுகாதார அலுவலர் பார்த்திபன்தான் என்றும் குற்றம் சுமத்துகிறார்கள்.

முதல்வரின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்று கூறிக் கொண்டு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வரும் இணை இயக்குனர் சம்பத் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் நற்பெயருக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கிறார்கள் டிபிஹெச்சில் பணிபுரியும் நேர்மையான அதிகாரிகள்.  

ஊதற சங்கை ஊதியாச்சு….