Mon. May 20th, 2024

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியை பாஜக அடிமை ஆட்சி என கடுமையாக திமுக விமர்சனம் செய்து வந்தததையடுத்து, அக்கட்சி மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கை கடந்த 2017 முதல் 2021 வரை பெருமளவு அதிகரித்தது. கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவியேற்றவுடன், மத்திய பாஜக அரசை கொள்கை ரீதியாக எதிர்ப்பதில் திமுக தலைமை வெறித்தனமாகவே செயல்பட்டது.

5 முறை முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தன் ஆட்சிக்காலம் முழுவதும் மத்தியில் அமைந்த ஆட்சிகளை ஒருமுறை கூட ஒன்றிய அரசு என்று கூறி அழைக்கவில்லை. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பேச்சிலும் எழுத்திலும் ஒன்றிய அரசே என்று துணிந்து விளித்துக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பன்வரிலால் புரோகித் இருந்த வரை மத்திய அரசின் மீதான திமுக அரசின் விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை.

ஆனால், புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற நாள் முதலாக, மத்திய அரசுக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடுவதில் அதீத முனைப்பு காட்டி வருகிறார். ஆளுநரை மீறி திமுக அரசால் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றி விட முடியாது என்ற நிலைக்கு தமிழக அரசை தள்ளியதையடுத்து, ஆளுநர் மீதான அதிருப்தி முதல்வர் முதல் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், மூத்த எம்பிக்கள் வரை அனைவரிடமும் காணப்படுகிறது.

நீட் தேர்வு, ஏழு பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுக அரசின் கோரிக்கைகளுக்கு ஆளுநர் ஆதரவு தராததால் கொதிப்பின் உச்சிக்கே சென்ற திமுக தலைமை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள தங்கள் பலத்தை முழுமையாக பயன்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.

ஆனால், ஆளுநர் விவகாரத்தில் மத்திய அரசு, திமுகவின் எந்தவொரு செயல்பாட்டிற்கும் ஆதரவு தராதது மட்டுமல்ல, ஆளுநர் தன்னிச்சையாக செயல்படும் அளவுக்கு சுதந்திரம் வழங்கியிருக்கிறது. அதனால்தான், திமுக அரசின் எந்தவொரு மிரட்டல்களுக்கும் பயப்படாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி., தன் போக்கை சிறிதும் மாற்றிக்கொள்ளாமல், மத்திய பாஜக அரசின் திட்டங்களை, செயல்பாடுகளை, குறிக்கோள்களை தமிழக மக்களின் மனங்களில் பதிய வைக்கும் பணிகளில் அதீத முனைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

மத்திய அரசின் மூலம் ஆளுநரை அடக்கி வைக்க முடியாது என்பதை காலதாமதாக உணர்ந்து கொண்டது திமுக அரசு. பத்தாண்டுகளுக்குப் பிறகு திராவிட சித்தாந்தத்தை உரக்க முழங்கும் ஆட்சியாக திமுக அரசு தனது செயல்திட்டத்தை அமைத்துக் கொண்டதால், அந்த ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநருக்கு பாடம் போட்ட திமுக தோழமை கட்சிகள் தீர்மானத்தி, ஆளுநரை மிரட்டி பணிய வைக்கும் களப் போராட்டத்தை முன்னெடுத்தனர். மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் வீரியமாக நடைபெற்ற போதும் ஆளுநர் மிரண்டு விடவில்லை.

ஆளுநரின் அன்றாட பணிகள் அனைத்துமே திமுக ஆட்சியை மட்டும் தட்டும் வகையிலேயே அமைந்திருப்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சிப் போல, ஆளுநர் செயல்பட முடியாது என்ற பிரசாரமும் பரவலாக முன்னெடுக்கப்பட்டன. அப்படிபட்ட பிரசாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில், ஆளும்கட்சியான திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில், ஆளுநருக்கான அதிகாரங்களை சுட்டிக்காட்டி, அவரின் அதிகார வரம்பை பகிரங்கப்படுத்தி அவரை மட்டும் தட்டுவதிலும் தீவிரம் காட்டியது திமுக.

ஆனால், அதன் பிறகும் கூட ஆளுநரின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆளுநருடன் மோதல் போக்கை மேற்கொள்வது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயனளிக்காது என்ற கருத்துகள் பரவலாக எழுந்தபோது, அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினே ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து, இருதரப்பினரிடையேயான கசப்பை போக்க முயன்றார். ஆனால், அவரின் முயற்சி வெற்றிப் பெறவில்லை.

அதனால் ஏற்பட்ட விரக்தியை இதுவரை மறைத்து வைத்திருந்த திமுக தலைமை, இப்போது மாநிலத்தின் நலனை கருதி ஆளுநரை அணுசரித்து போகும் மனநிலைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு இன்றைய தினம் முரசொலியில் வந்து ள்ள செய்தி அமைந்து விட்டது என்று குமறுகிறார்கள் மாநில சுயாட்சி கொள்கையில் தீவிர பற்றுள்ள உணர்வாளர்கள்.

மிரட்டலுக்கு பணியாத ஆளுநரை வழிக்கு கொண்டு வர கெஞ்சும் அளவுக்கு திமுக இறங்கிவிட்டதுதான் தமிழகத்திற்கு ஏற்பட்ட துயரம் என்கிறார்கள் தமிழ் தேசியவாதிகள். ஏற்கெனவே ஆளுநரை விமர்சித்து முரசொலியில் வெளியிடப்பட்ட தலையங்கத்தையும், இன்றைய தினம் தாழ்பணிந்து கெஞ்சும் அளவுக்கு வெளியிடப்பட்ட முரசொலி கட்டுரையையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து திமுக எதிர்ப்பாளர்கள் கடுமையாக கிண்டலும் கேலி செய்து வருகிறார்கள். குறுகிய காலத்திலேயே திமுக தனது போராட்டக் குணத்தை மாற்றிக் கொண்டதற்கான மர்மம், ஜி ஸ்கொயர் விவகாரத்தில் மத்திய அரசு மூக்கை நுழைந்து விடக் கூடாது என்ற பயமா? என கிண்டலாகவும் பதிவு செய்துள்ளார்கள் தேசிய சிந்தனையாளர்கள்.