Tue. May 21st, 2024

தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியலுக்கு எப்போதுமே காரம் சேர்ப்பது மதுரை போஸ்டர் அரசியல்தான்..

மேடை போட்டு விடிய விடிய காரசாரமாக வறுத்தெடுப்பதை விட ஒற்றை போஸ்டர் அரசியல் களத்தை சூடாக்கிவிடும்.

மதுரையில் திமுக, அதிமுக என மாறி மாறி ஒட்டப்படும் போஸ்டர்கள், மற்ற மாவட்டங்களிலும் அனலை கிளப்பி தலைநகரான சென்னையை கொதி நிலைக்கு கொண்டு வந்துவிடும்.

அரசியல் கட்சியினர் மட்டுமே கடைப்பிடித்து வரும் போஸ்டர் அரசியல் யுத்தத்தில் நடிகர் விஜயின் ரசிகர்களும் குதித்து இருப்பதுதான் மதுரை மாநகரை இப்போது சூடாக்கிக் கொண்டிருக்கிறது.

வி.ஹெச்.பி. நடத்திய துறவிகள் மாநாட்டில் மதுரை ஆதினம் பேசிய பேச்சு, அரசியல் தலைவர்களிடம் குறிப்பாக திமுக ஆதரவுக் கட்சிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில்களில் உள்ள உண்டியல்களை தூக்க வேண்டும், நடிகர் விஜய் படத்தை பார்க்க கூடாது என போகிற போக்கில் மதுரை ஆதினம் பேசிய கனல் பேச்சு, அவரது கடந்த காலத்தையும் சேர்த்து வரித்து கொட்டுவதற்கு வசதியாக அமைந்து விட்டது.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிட சிந்தனையாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட முன்னணி, மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக மதுரை ஆதினத்திற்கு கடுமையாக எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர். அவர்களைப் பின்றி டிவிட்டர், முகநூல் உள்ளிட் சமூக ஊடகங்களில் திராவிட பற்றாளர்கள் மதுரை ஆதினத்தை சகட்டு மேனிக்கு பிரித்து மேய்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிபட்ட நேரத்தில் மதுரையில் ஆதினத்தை கடுமையாக எச்சரித்து விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர், ஆதினத்திற்கு எதிரான விமர்சன தீயில் எண்ணெய் இல்லை, பெட்ரோலை ஊற்றும் அளவுக்கு உள்ளதாக ஆதினத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கவலைவோடு பேசுகிறார்கள்…

மதுரை ஆதினத்தை எச்சரிக்கும் விஜய் ரசிகர்களின் போஸ்டர் இதோ…