Tue. May 21st, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள திமுக, ஓராண்டை வெற்றிகரமாக கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

முதல்முறையாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு பிரபல ஊடகமான புதிய தலைமுறை 50 சதவீதத்திற்கு மேல் நல்ல மதிப்பெண் வழங்கியுள்ளதைப் பார்த்து திமுக முன்னணி தலைவர்கள், ஆதரவாளர்கள் உற்சாகமான மனநிலையில் இருந்து வருகிறார்கள்.

ஆனாலும் கூட, தலைமைச் செயலகத்தில் கடந்த ஒரு வாரமாக சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளின் இடம் மாற்றம் பற்றி அடிக்கப்படுகிற கமென்ட்டுகள், நகைச்சுவையில் தனிரகமாக இருக்கிறது.

முதல்வர் வீட்டில் நடந்ததாக கூறப்படும் நகைச்சுவை இது…

துர்கா ஸ்டாலின் : என்னங்க…. அரசு நிர்வாகம் ரொம்ப மோசமா இருக்கிறதுன்னு பேசிக்கிறாங்களாமே…

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உனக்கும் தெரிஞ்சிடுச்சா….

இப்படியான  உரையாடல் முதல்வர் வீட்டில் நடைபெற்றதாக மூத்த அமைச்சர்கள் பலரின் அலுவலக பணியாளர்களே தங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்கிறார்கள்.

இப்படிபட்ட பேச்சு எழுந்திருப்பதன் பின்னணி என்ன?

அரசியல் சார்பற்ற, நேர்மையான மூத்த ஐஏஎஸ் அதிகாரியிடம் கேட்டோம். மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் தலைமைச் செயலகத்தில் கடந்த இருவாரங்களுக்கு மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் பல்வேறு விஷயங்களை விவரித்தார்.

தமிழக அரசின் நிர்வாகத்தில் 35க்கும் மேற்பட்ட துறைகள் இருந்தாலும் மக்களுடன் நேரடியாக தொடர்புடைய, செல்வாக்குள்ள துறைகள் என்று எடுத்துக் கொண்டால் 20 துறைகளுக்குள் தான் இருக்கும்.

திமுக, அதிமுக என ஆட்சி மாற்றம் நடக்கும் போதொல்லாம் இந்த 20 துறைகளின் செயலாளர்களாக, நிர்வாகத்தில் அனுபவமிக்க ஐஏஎஸ் அதிகாரிகளைதான் பணிநியமனம் செய்வார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு  செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த போது, இந்த 20 துறைகளுக்கு நியமிக்கப்பட்ட சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளின் பின்னணி பற்றி அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா நன்றாகவே அறிந்து வைத்திருந்தார். அதனால், அவரை தங்கள் இழுப்புக்குள் எந்தவொரு உயர் அதிகாரிகளாலும் இழுக்க முடியவில்லை.

மேலும், தவறு செய்கிறார், துறையை நிர்வகிக்கும் திறமை இல்லாதவராக இருக்கிறார் என்று தெரியவந்தால், யாருடைய ஆலோசனைகளையும் கேட்காமல், அடுத்த நிமிடமே அதிரடியாக தூக்கி எறிந்து விடுவார். அதனால், சீனியர், ஜுனியர் என்ற எந்தவொரு அந்தஸ்தில் இருக்கும் உயர் அதிகாரிகளும் அடக்க, ஒடுக்கமாக பணியாற்றி வந்தனர்.

ஆனால், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், மிகுந்த ஜனநாயகவாதியாக, பண்பட்டவராக இருக்கிறார். அவரின் பெருந்தன்மையை பலவீனமாக கருதிக் கொண்டு முதல் அமைச்சரின் செயலாளர்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய நான்கு அதிகாரிகளும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் தலைமைச் செயலகம் முழுவதும் நாளுக்கு நாள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணி, நெடுஞ்சாலை, உயர்கல்வி, பள்ளிக்கல்வி  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு, மக்கள் நல்வாழ்வு, வணிக வரி, போக்குவரத்து, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு, , வேளாண்மை,வருவாய், வீட்டுவசதி, ஊரக வளர்ச்சி,சமூக நலம், கால்நடை, வனம், உணவு, பால்வளம் உள்ளிட்டவை…

இந்த துறைகளின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் அசாத்திய திறமைக் கொண்டவர்களாக இருந்தால் அவர்களின் நேர்மையைப் பற்றிக் கூட பெரிதாக யாரும் பேச மாட்டார்கள்.

ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த 20 துறைகளின் செயலாளர்களில் பலர் ஜுனியர் அதிகாரிகளாகவும், நிர்வாகத் திறன் அற்றவர்களாகவும் இருப்பதால் கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே  அந்த துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்ற பேச்சு பலமாகவே அடிபட்டு வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாறுதல் முழுவதையுமே உதயச்சந்திரன் ஐஏஎஸ்தான் கவனித்து வருகிறார். தனிக்காட்டு ராஜாவாக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதுதான் எங்களைப் போன்ற சீனியர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதன்மைச் செயலாளர் அந்தஸ்திலான அதிகாரி,, தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான அதிகாரியை பணிமாற்றம் செய்வது எப்படி நியாயமான, ஜனநாயக ரீதியான நடவடிக்கையாக இருக்கும்?.

இன்றைக்கு முக்கிய துறைகளில், மாவட்ட ஆட்சியர்களாக உள்ளவர்களில் 100க்கு 99 சதவீதம் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸின் பரிபூரண ஆசி பெற்றவர்கள்தான்.

ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் கூட முதல்வரின் குடும்ப உறவுகளின் பரிந்துரைகள் செல்லுபடியாகிறது, ஆனால் ஐஏஎஸ் பணியிட மாற்றங்களில் முதல்வரின் குடும்ப உறவுகள் தலையிடுவதே இல்லை என்று கூறும் நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் விருப்பு வெறுப்பின்றி செயல்படுவதை விட்டுவிட்டு, தான் வைத்தது தான் சட்டம் என்று உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஆடும் ஆட்டத்தை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? இரண்டாம் ஆண்டிலும் இதே நிலை நீடித்தால் இந்த ஆட்சிக்கு எந்தவகையில் நன்மையை தேடித் தரும்? என்பதுதான் எங்கள் கேள்வி,

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, முதல் அமைச்சராக பணியாற்றிய காலங்களில் எல்லாம் தனித்த ராஜதந்திரத்தோடு ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுத்தார். அவருக்கான விளம்பரத்தை அவருக்கே உரிய சிறப்பு குணங்களான பன்முகத் திறன் மூலம் தேடிக் கொண்டார். ஆனால், அவரது தனையனாக இருக்கும் தற்போதை முதல்வர் மு.க.ஸ்டாலினை நாள் முழுவதும் விளம்பர வெளிச்சத்திலேயே வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தையும் தனது கைப்பிடிக்குள்ளேயே வைத்திருக்கிறார் என்பது எங்களைப் போன்ற சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளின் விமர்சனம் அல்ல. உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்த ஓய்வுப்பெற்ற அசோக் வரதன் ஷெட்டியின் புலம்பல்…

முதல்வரின் செயலாளர்களில் 2 வது இடத்தை பிடித்திருக்கும் உமாநாத், 3 வது செயலாளரான சண்முகம், 4 வது செயலளரான அனு ஜார்ஜ் ஆகிய மூவரின் ஆலோசனைகளையும், சிபாரிசுகளையும் கேட்டே, ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடங்களை மாற்றி அமைக்கிறார் உதயச்சந்திரன் ஐஏஎஸ்.

இதில் கொடுமை என்னவென்றால், முதல்வரின் 2 வது செயலாளராக உள்ள உமாநாத் ஐஏஎஸ்ஸின் அன்றாட செயல்பாடுகளை ரகசியமாக ஒரு குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்பதும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அடிக்கடி சென்று வருவதையும் அந்த குழு மோப்பம் பிடித்து முதன்மையான குடும்பத்து உறுப்பினர்களுக்கு டெய்லி அப் டேட் தருகிறார்கள் என்பதும் கூட அவருக்கு தெரியாததுதான்.

ஐஏஎஸ் உயரதிகாரிகள் பணியிட மாற்றத்தில் முதல்வரின் தனிப்பட்ட விருப்பமோ, மூத்த அமைச்சர்களின் பரிந்துரைகளோ ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருப்பதைதான் என்னைப் போன்ற நேர்மையான சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் கவலையுடன் பார்க்கிறோம்.

முதல்வராக முதல்முறையாக பதவியேற்று இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், திறமைக்கும், நேர்மைக்கும் மரியாதை இல்லாதபோது, சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தளவுக்கு உற்சாகமாக தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்..

கொத்து கொத்தாக ஐஏஎஸ் உயரதிகாரிகளை, மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்யும் நடைமுறையை கைவிட்டுவிட்டு, நால்வர் அணியாக நின்று திமுக ஆட்சியை, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆட்டி படைக்கும் உதயச்சந்திரன் தலைமையிலான 4 ஐஏஎஸ் அதிகாரிகளையும்( அவர்களுக்கு விருப்பமான துறைகளுக்கு வேண்டுமானாலும்கூட) அதிரடியாக மாற்றினாலே போதும், திமுக ஆட்சியின் நிர்வாகம் இனி வரும் காலங்களிலாவது சிறப்பாக இருக்கும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் அனைத்து புதிய திட்டங்களின் பயன்களும் வெகு விரைவாக மக்களை சென்றடையும் என்பதுதான் எங்களின் ஆதங்கம் என்று ஒரே மூச்சில் பேசி முடித்தார் சீனியர் ஐஏஎஸ் அதிகாரி.

என்ன செய்யப் போகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்?