மாநிலங்களவையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களாக உள்ள 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜுன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார் ஆகிய மூன்று பேரும் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய மூன்று பேரும் தங்கள் பதவியை இழக்கிறார்கள். இந்த 6 பேரை உள்ளடக்கி நாடு முழுவதும் காலியாகும் 57 உறுப்பினர் பதவிகளுக்கு, அடுத்த மாதம் ஜுன் 10 ம் தேதி தேர்தல் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்து இந்திய தேர்தல் ஆணையம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, சட்டப்பேரவையில் இன்றைய நிலையில் உள்ள கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும்கட்சியான திமுகவுக்கு நான்கு எம்பிக்களும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இரண்டு எம்பிக்களும் உறுதியாக கிடைப்பார்கள் என்ற நிலையில், இரண்டு கட்சிகளிலும் உள்ள முன்னணி நிர்வாகிகள், ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பெற, அவரவர் சக்திக்கு ஏற்ப மேலிடத்தின் ஆதரவை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளும் திமுகவில் கடும்போட்டி நிலவி வரும் நிலையில், அதிமுகவில் சத்தமில்லாமல், ராஜ்யசபா தேர்தலுக்கான இரண்டு வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இறுதி செய்துவிட்டதாக கொங்கு மண்டலத்தில் இருந்து நம்பகத் தகுந்த முன்னணி தலைவர் மூலம் நல்லரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகரிகமான முறையில் ஈடுபட்டு வந்தாலும் மாவட்ட அளவிலான அரசியலில் ஆளும்கட்சியைச் சேர்ந்த திமுக அமைச்சர்கள், அவர்களது வாரிசுகள் மற்றும் முன்னணி நிர்வாகிகளால் அதிமுகவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பழிவாங்கும் அரசியல் போக்கை எதிர்கொள்ள எம்பி பதவி முக்கியம் என்ற சிந்தனையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர், ராஜ்யசபா தேர்தலையொட்டி கச்சை கட்டி வருகின்றனர்.
அதேபோல, மகளிர் அணியைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகளும் மியூசிக்கல் சேர் போல, தேனிக்கும், சேலத்திற்கும் படையெடுத்து, தங்களுக்கு வாய்ப்புத் தருமாறு கெஞ்சி வருகின்றனர். இப்படி தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், ராஜ்ய சபா தேர்தலையொட்டி தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தர்பல்டி போல அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜ்யசபா தேர்தல் ரேஸில் இருந்து பெருந்தன்மையாக விலகிவிட்டார் என்று அதிர்ச்சி கொடுக்கிறார் இரட்டை தலைமைக்கு மிக,மிக நம்பிக்கைக்குரிய கொங்கு மண்டல அதிமுக முன்னணி தலைவர் ஒருவர்.
“இன்றைய சூழலில் மாவட்ட அரசியல்தான் சரியாக வரும். விழுப்புரம் மாவட்டத்தில் ஆளும்கட்சியின் அதிகார அரசியலுக்கு கடிவாளம் போட, மாவட்ட அளவிலான அரசியலில் முனைப்புக் காட்டினால்தான், 2024 ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக வலிமையுடன் எதிர்கொள்ள முடியும்”என்று கூறி, ராஜ்யசபா தேர்தல் போட்டியில் இருந்து பெருந்தன்மையுடன் அவராகவே விலகிவிட்டார் என்கிறார்கள் சிவி சண்முகத்தின் தீவிர விசுவாசிகள்.
இதேபோல, திமுக ஆட்சியில் சிறைக்குச் சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்த மற்றொரு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், சிவி சண்முகம் பாதையிலேயே ராஜ்யசபா தேர்தல் போட்டியில் இருந்து விலகிவிட்டார் என்று அவரது ஆதரவாளர்களே தகவல் தெரிவிக்கின்றனர்.
இப்படி யாரெல்லாம் தலைமைக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று அக்கட்சியின் இரட்டை தலைமை ஆழ்ந்த கவலையில் இருந்து வந்ததோ, அவர்கள் எல்லாம் அமைதியாக ஒதுங்கி கொண்டு வருவதால், வடக்கு, மேற்கு மண்டலத்திற்கு ஒருவர், தென்,டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கி ஒருவர் என்று இரண்டு ராஜ்ய சபா சீட்களையும் இரட்டை தலைமை பிரித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார் கொங்கு மண்டல அதிமுக முன்னணி தலைவர்.
தென், டெல்டா மாவட்டங்களின் பிரதிநிதியாக முன்னாள் எம்எல்ஏவும் வழக்குரைஞருமான இன்பதுரையின் பெயர் முதல் இடத்தில் இருக்கிறது. இவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முழு முனைப்புடன் ஆதரவு திரட்டி வருகிறார். திமுக ஆட்சி வந்த நேரம் முதலாக அதிமுகவினருக்கு எதிராக தொடுக்கப்படும் அனைத்து வழக்குகளையும் திறம்பட எதிர்கொள்வதிலாகட்டும், அரசியல் ரீதியாக ஆளும்கட்சியினருக்கு எதிராக பதிலடி கொடுப்பதிலாகட்டும் துணிச்சலுடன் பணியாற்றி வருகிறார் இன்பதுரை என்பது எஸ்.பி.வேலுமணியின் வாதம்.
திமுகவில் மூத்த வழக்கறிஞர்களை ராஜ்யசபா எம்பி ஆக்கியுள்ளதைப் போல, இன்பதுரையும் ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற எஸ்.பி.வேலுமணியின் வாதத்திற்கு இரட்டை தலைமை சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல் கசிகிறது.
மற்றொரு உறுப்பினர் யார்? என்பதில் இபிஎஸ் முடிவே இறுதியானது என்று என்பதால், மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் முன்னணி நிர்வாகிகளும் களத்தில் குதித்துள்ளனர். இரட்டை தலைமையை அடிக்கடி சந்தித்து மகளிர் அணி நிர்வாகிகள் ஆதரவு திரட்டி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி வேறொரு சிந்தனையில் இருக்கிறார் என்கிறார் அதே கொங்கு மண்டல அதிமுக முன்னணி தலைவர்.
இபிஎஸ் அடிக்கடி உச்சரிக்கும் முழக்கமான அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட தலைமை பதவிக்கு வர முடியும் என்பதை நிரூபித்து காட்டும் எண்ணத்தில் இருப்பதாகவும், அதற்காக, அவரது தேர்வாக நடிகை விந்தியாவை டிக் அடித்துவிட்டார் என்றும் கொங்கு அதிமுக முன்னணி தலைவர் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் காலத்திலேயே அவரின் முழு நம்பிக்கையை பெற்றவராகவும், தேர்தல் பரப்புரைகளின் போது திமுகவுக்கு எதிராக அனல் கக்கும் வசைபாடல்களை துணிச்சலாக முன்னெடுத்ததாலும், நடிகை விந்தியாவுக்கு போயஸ் கார்டனில் எப்போதுமே சிறப்பான வரவேற்பு கிடைத்து வந்தது. அவரது மறைவுக்குப் பிறகு சில காலம் அமைதியாக இருந்த நடிகை விந்தியா, மீண்டும் ஆவேச பீரங்கியாகி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு முழுமையான விசுவாசம் காட்டி, தேர்தல் காலங்களில் அதிமுகவுக்கு தீவிரமாக பரப்புரை மேற்கொண்டதற்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தீர்மானித்து விட்டார்.
அதைவிட முக்கியமாக வி.கே.சசிகலா தரப்பில் இருந்து ஆசை வார்த்தைகளை கூறிய போதும், அதிமுகவுக்கு துரோகம் செய்யாமல் தொடர்ந்து கட்சிக்கும், தலைமைக்கும் உண்மையான விசுவாசத்தை காட்டி வருகிறார் நடிகை விந்தியா என்று அவ்வப்போது இபிஎஸ்ஸே பாராட்டி வருவதும் உண்டு. 2021 சட்டமன்றத்தேர்தலிலேயே போட்டியிட வாய்ப்பு கேட்டு கடைசி நிமிடம் வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தவர் நடிகை விந்தியா. அப்போது வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும், இரட்டை தலைமைக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட விமர்சனம் வைக்காமல், மிகுந்த எழுச்சியோது தேர்தல் பரப்புரையை மாதக்கணக்கில் செய்ததையெல்லாம் இபிஎஸ் ஆழ்ந்து யோசித்து பார்த்துள்ளார்.
அதை தவிர, தற்போது தலைமைக்கு விசுவாசமாக இருக்கும் வளர்மதிக்கோ, கோகுல இந்திராவுக்கோ வாய்ப்பு கொடுத்தால், மற்றொருவர் தலைமைக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. தலைமை மீதான கோபத்தில் தவறான முடிவை கூட எடுக்கலாம். இருவருமே சமாதானம் அடையும் வகையிலும், இருவரும் ஏற்கெனவே எம்எல்ஏ, அமைச்சர் என பதவிகளில் இருந்துள்ளதால், அவர்களை சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் இபிஎஸ்.
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களாக இன்பதுரையையும், நடிகை விந்தியாவையும் பரிந்துரை செய்தால், உட்கட்சிக்குள் பெருமளவில் கொந்தளிப்பு வராது என இரட்டை தலைமை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது என்று தனது பேச்சை நிறைவு செய்தார் கொங்கு மண்டல அதிமுக முன்னணி தலைவர்.