Sat. May 18th, 2024

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கத்தில், ரூ 95.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் – வேளச்சேரி பாலப்பகுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து 2 புள்ளி 3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட புதிய பாலத்தில் வாகனத்தில் சென்று முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகரில் மிக நீளமான மேம்பாலம் என்ற பெருமையை மேடவாக்கம் மேம்பாலம் தாங்கி நிற்கிறது…

சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 146 கோடியே 41 லட்சம் ரூபாயில் மேடவாக்கத்தில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டன. அதில் ஒன்றாக வேளச்சேரி – தாம்பரம் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட மேம்பாலம் ஏற்னெவே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
இரண்டாவதாக மறைமலை அடிகள் பாலம் – இரும்புலியூர் சாலையில் அமைக்கப்பட்ட மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம்- மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் பரங்கிமலை மேடவாக்கம் சாலை சந்திப்பு ஆகியவற்றை இணைக்கும் வகையில் 95 கோடியே 21 லட்சம் ரூபாய் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டது. இரண்டு புள்ளி சுழியம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட இந்த புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.


பின்னர், தனது வாகனத்தில் புதிய மேம்பாலத்தின் வழியாக முதல்வர் பயணித்து, கட்டுமானப் பணிகளையும், வாகன ஓட்டுனர்களுக்கான வசதிகளையும் ஆய்வு செய்தார். புதிய மேம்பாலத் திறப்பு விழாவில் முதல்வருடன் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு,குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், விரைவாகவும் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவசர நேரங்களில் நோயாளிகளை விரைவாக மருத்தவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கும் வழி ஏற்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.