Mon. Nov 25th, 2024

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் இன்று தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக பிளவுப்பட்டு இருந்த போது, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை பெறும் நடவடிக்கையில் டிடிவி தினகரன் ஈடுபட்டதாகவும், அதற்காக முகவர் ஒருவர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்க முற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் என்பவரை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறையினர் வரும் 8ம் தேதி ஆஜராகுமாறு தினகரனுக்கு சம்மன் அனுப்பினர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த வக்கீல் கோபிநாத் இன்று (ஏப்.,6) திடீரென தற்கொலை செய்துக்கொண்டார்.

சென்னை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்த 31 வயதான கோபிநாத், பூந்தமல்லி நீதிமன்ற வக்கீலாகவும், பா.ம.க.,வின் திருவேற்காடு பகுதி அமைப்பு செயலராகவும் பதவி வகிக்கிறார். இவர் மூத்த வக்கீல் மோகன்ராஜின் ஜூனியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக மோகன்ராஜை டில்லி போலீசாரும், அமலாக்கத்துறையும் விசாரணை செய்துள்ளனர். பின்னர், அவரின் ஜூனியர் கோபிநாத் செல்போனில் தொடர்பு கொண்ட அமலாக்கத்துறையினர், விசாரணைக்கு டில்லி வருமாறு கூறியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், கோபிநாத் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் உடலை மீட்ட திருவேற்காடு போலீசார், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கின் விசாரணை சூடுபிடித்திருக்கும் நிலையில் வக்கீல் தற்கொலை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.