சட்டப்பேரவையில் இன்று நீர்வளத்துறை மீதான மான்ய கோரிக்கையை தாக்கல் செய்து அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார்.
அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், கடந்த 2006-2011 ஆட்சிக்காலத்தில் அப்போது வேளாண்துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், ஜப்பான் நாட்டிடம் இருந்து 500 கோடி ரூபாயைப் பெற்றுக் கொண்டு கருவேல மரங்களை தமிழகம் முழுவதும் வளர்த்தால் பெரும் தீங்கு ஏற்பட்டு விட்டது. கருவேல மரம் வளர்க்கும் திட்டத்தை அன்றைக்கே நான் எதிர்த்தேன். கருவேல மரங்களால் பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அதனை முற்றிலுமாக அகற்ற தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோபாலபுர குடும்ப விசுவாசி
நான் கோபாலபுரத்து குடும்பத்து விசுவாசி. இங்கே அமர்ந்திருப்பது மு.க.ஸ்டாலினா என்பது அல்ல. நான் காண்பது எனது தலைவர் கலைஞர் முகத்தைதான். அவரின் அருகில் நான் உட்கார்ந்து இருக்கிறேன் என்றால், ஒவ்வொரு நிமிடமும் அதை நினைத்துதான் நான் பெருமையடைகிறேன். 1989 ஆம் ஆண்டில் இருந்து திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் பொதுப்பணித்துறையை என்வசம்தான் ஒப்படைத்திருக்கிறார்கள்.
1000 தடுப்பணை
தடுப்பணை கட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 5 ஆண்டு கால ஆட்சியில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும். அனைத்து தொகுதியிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பது எனது எண்ணம்.
நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்; கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.250 கோடி திட்டம்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, முதற்கட்டமாக ₹250 கோடி மதிப்பீட்டில் 8 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அடையாறு திருநீர்மலை முதல் முகத்துவாரம் வரை 7 நிலைகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.104.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பேரவையில் அறிவித்தப்படி 200 ஏரிகளை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 6 ஆம் கட்டத்தில் 115 ஏரிகள் ரூ.71. 89 கோடி மதிப்பிலும் 7 ஆம் கட்டத்தில் 85 ஏரிகள் ரூ. 82.35 கோடி செலவிலும் செப்பணிடுதல், சீரமைத்தல் மற்றும் புனரமைப்பு ஆகிய பணிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
ஒருங்கிணைந்த கூவம் ஆறு சூழலியல் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.604.77 கோடி மதிப்பீட்டில் 60 குறுகிய கால திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 27 கி.மீ. நீளத்திற்கு கூவம் ஆற்றினை 7 நிலைகளில் சீரமைக்க ரூ. 93 கோடி நீர்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.