Tue. Dec 3rd, 2024

நாமகிரிப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் எடுக்கும் விவகாரத்தில் ஆளும்கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கனிமவளத்தை கொள்ளையடிக்கும் கும்பலை கண்டு அஞ்சி நடுங்கும் அரசு அதிகாரிகள் மீதும் ஊர்மக்கள் கடும்கோபத்தில் உள்ளனர்.

மணல் வியபாரம் ஜரூர்..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பாக அளும் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக நாள்தோறும் இரவு நேரங்களில் டிராக்டர், ஜேசிபி எந்திரம் பயன்படுத்தி பல மீட்டர் ஆழத்தில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் தெரிந்தும் கண்டும் காணாது போல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

ஆளும்கட்சியினரிடையே மோதல்:

இந்நிலையில், மணல் அள்ளுவதில் ஆளும்கட்சியினரிடையே போட்டோ போட்டி நடந்து வருகிறது. இதனால் ஒருவர் மணல் அள்ளினால் மற்றொருவர் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால், அதிகாரிகள் இருதலை கொள்ளியாய் விழிபிதிங்கி நிற்கின்றனர். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை சீராப்பள்ளி பகுதியில் நேற்று இரவு மணல் அள்ளிய ஆளும்கட்சியை சேர்ந்தவருக்கு சொந்தமான டிராக்டர் வாகனத்தை அதிகாரத்தில் உள்ள மற்றொரு ஆளும் கட்சியை சேர்ந்தவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சிறைபிடிக்க சொன்னதன் பேரில் சீராப்பள்ளி பகுதியில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஆளும் கட்சியினரிடையேயான மணல் அள்ளும் போட்டியால் வருவாய்த்துறையினர், காவல்துறையினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் இப்பகுதிகளில் மணல் அள்ளுவதை முழுமையாக தடுத்து நடவடிக்கை எடுத்தால், மட்டுமே கனிமவளம் பாதுகாக்கப்படும் என பொதுநல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆளும்கட்சி நிர்வாகிகளுக்குப் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள், சட்டவிரோதமாக கனிம வளங்கள் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தும் உள்ளூர் மக்கள், இரவு நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஊர்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுத்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.