Sat. Nov 23rd, 2024

குடும்பத்தோடு முதல்வர் துபாய் சென்றுள்ளது, தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் அளிக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தை, அதுவொரு குடும்ப சுற்றுலாவாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள்.அதற்கென்று தனி போயிங் விமானத்தை எடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் அந்த போயிங் விமானம் மூலம் துபாய் சென்றிருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். துபாய் சென்றுள்ளது தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவோ அல்லது அவர்களது குடும்பத்திற்கு என்று உரிய தொழில் துவங்கவா என்று மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கும் அப்படிதான் தெரிகிறது. ஏனென்றால் முதல்வர் மட்டும் போயிருந்தால் பரவாயில்லை. தொழில்துறை அமைச்சர் போயிருந்தால் பரவாயில்லை, துறைச் செயலாளர் போயிருந்தால் பரவாயில்லை. குடும்பமே துபாய் சென்றிருக்கும்போது மக்கள் பார்வைக்கு, குடும்பச் சுற்றுலாவாகதான் தெரிகிறது. மக்கள் பேசுவது சரி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தனிப்பட்ட காரணம்

எனவே, முதல்வர் துபாய் சென்றிருப்பது, தமிழ்நாட்டிற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காவோ, மக்களுக்கு நன்மை செய்வதற்காவோ பயணம் மேற்கொள்ளவில்லை. தனிப்பட்ட காரணத்திற்காகதான் ஸ்டாலின் துபாய் சென்றிருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ஸ்டாலின் குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் துபாயில் தொழில் துவங்குவதற்காகதான் சென்றிருக்கிறார்கள் என்று மக்கள் பேசிக்கொள்வதைதான் எங்களால் கேட்க முடிகிறது.

கண்காட்சி முடிவடையும் நேரம்

அதுமட்டுமல்ல, சர்வதேச வர்த்தகக் கண்காட்சி துவக்கப்பட்ட நாள் 1.10.2021, கண்காட்சி முடிகிற நாள் 31.3.2022. இன்னும் ஒரு நான்கு நாளில் கண்காட்சி முடியப்போகிறது. முடியற தருவாயில் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் சார்பில் அங்கே சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அரங்கு அமைத்து துவக்கி வைப்பது வேடிக்கையாக இருக்கிறது. கண்காட்சி துவக்கி வைக்கப்பட்ட கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாய் சென்று தமிழக அரசின் அரங்குகளை அமைத்து துவக்கி வைத்திருந்தால் பரவாயில்லை. இதை ஒரு சாக்காக வைத்து துபாய் செல்வதற்கு சர்வதேச வர்த்தக கண்காட்சியை பயன்படுத்திக் கொண்டார்கள்.


அதோடு நான் வெளிநாடு சென்ற போது அப்போது நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போது முதல் அமைச்சராக இருந்த ஸ்டாலின் குறிப்பிட்டார். அவர் பேசிய வீடியோவையும் உங்களுக்கு போட்டுக் காட்டுகிறேன். ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்..

சசிகலாவுக்கு இடமில்லை..

சசிகலா தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, இந்த கேள்விகளுக்கு பலமுறை பதிலளித்து விட்டோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு மாவட்டங்கள் நீங்கலாக, தலைமைக் கழகம் இதுதொடர்பாக நிறைற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

மேலும், தலைமைக் கழகத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிவுக்கு வந்த ஒரு விவகாரத்திற்கு மீண்டும் யாராலும் புத்துயிர் கொடுக்க முடியாது. நானும் ஓபிஎஸ்ஸும் இணைந்து இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பதிலும் அனைத்து ஊடகங்களிலும் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது. சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை. சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து ஆகும். தனிப்பட்ட முறையில் கூறுவதையும், அரசியல் ரீதியாக கூறுவதையும் பிரித்து பார்க்க் வேண்டும். மு.க.ஸ்டாலினோடு தனிப்பட்ட முறையில் எங்களுக்கு பிரச்னையில்லை. அவருடன் அரசியல் ரீதியாகதான் பிரச்னை.

சிபிஐ விசாரணை கேட்போம்

விருதுநகர் பாலியல் வன்முறை தொடர்பான வழக்கில் தமிழக அரசு நியாயமான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குகிறதா என்று கண்காணிப்போம். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை என்றால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதியை பெற முயற்சிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.