Sat. Nov 23rd, 2024

திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. குடும்ப பெண்களுக்கு உதவித்தொகை, கல்விக்கடன் ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் குறித்து பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. கட்டுமானப் பொருட்களின் விலை அதிகமாகிவிட்டது. மாநிலத்தின் வருவாய் அதிகரித்த போதும், அரசின் கடன்தொகை குறையவில்லை.

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவினரின் பரிந்துரைகள் குறித்தும் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் வெளியிடப்படவில்லை.

அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவின் நிறைவு நேரத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு வாக்குப்பதிவு செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில் திமுகவினர் அதிகளவு கள்ள ஓட்டு போட்டுள்ளனர். கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கும், வாக்கு அளித்தவர்களின் எண்ணிக்கைக்கும் ஆயிரக்கணக்கில் வேறுபாடு உள்ளது.

சென்னையில் ஆயிரக்கணக்கான ரவுடிகள் நடமாடி வருவதாக காவல்துறை டிஜிபி கூறியிருந்தார். அவர்களில் ஒருவரை கூட உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்படவில்லை. அவர்களை கள்ள ஓட்டு போட திமுக அரசு பயன்படுத்திக் கொண்டது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.