தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2022 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, நிதி நிலை அறிக்கையை வாசிக்க விடாமல் முழக்கங்களை எழுப்பியது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள். முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதை கண்டித்தும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக நடத்திய அராஜகத்தை கண்டித்தும் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
அதன் காரணமாக சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்ட போதும், நிதியமைச்சர் தொடர்ந்து நிதி நிலை அறிக்கை விவரங்களை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் முதல் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். அவையின் நடவடிக்கைகளை நன்கு அறிந்தவர்கள். நிதிநிலை அறிக்கை தாக்கல் அன்று வேறு எந்த அலுவல்களும் எடுத்துக் கொள்ளப்படாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தவர்கள். அதிமுக உறுப்பினர்கள் பேச விரும்பும் அனைத்து விஷயங்களுக்கும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது நேரம் தரப்படும்.
ஏற்கெனவே நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் 2 மணிநேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறார். எதிர்க்கட்சிக்கு தேவையான நேரத்தை ஒதுக்க ஒருபோதும் தயங்கியது இல்லை. எனவே, அவையின் மரபை காக்க அதிமுக உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் வலியுறுத்தினார்.
அதையும் மீறி அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சிறிது நேரத்திற்குப் பிறகு எதிர்க்கட்சித்தலைவர் தலைமையில் அனைத்து அதிமுக உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.