விருதுநகரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த 22 வயது பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் திமுகவை சேர்ந்த இருவர், நான்கு பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணையில், ஹரிஹரன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் காதலிப்பது போல் நடித்து, ஆபாச படம் பிடித்துள்ளார். ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரும் அவரது நண்பர்களும் அப்பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. ஹரிஹரன் திமுகவைச் சேர்ந்தவர் என்ற தகவலும் தெரியவந்துள்து.
பாஜக தலைவர் கே.அண்ணாமலை கண்டனம்:
விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் – இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர்.
இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது அறிவாலயம் அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். தமிழ்நாடு முதல்வர், தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா?
கனிமொழி எம்பி கண்டனம்.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் கடுமையான தண்டனை தர வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இதோ..
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
விருதுநகர் பாலியல் வன்புணர்வு கொடூரம் அதிர்ச்சியளிக்கிறது. பொள்ளாச்சி போலவே, பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி,8 பேர் தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.இதில் 4 பேர் பள்ளிமாணவர்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறைக்கு நன்றி.
பள்ளி மாணவர்கள் மனதில் கூட,கொடூரமான பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபடும் அளவிற்கு பாலியல் வக்கிரம் புரையோடிக் கிடக்கிறது. பெண்ணை வெறும் உடலாக,காமப்பொருளாக மட்டும் பார்க்கும் மன நிலையிலிருந்தே இம்மாதிரியான கொடும் குற்றங்கள் உருவாகின்றன.
கடுமையான சட்ட நடவடிக்கைகளோடு, கல்வித்திட்டத்திலும் பெண்களை சமமாக,அறிவுத்தளத்தில் அணுகுவது பற்றிய உரையாடல் நிகழும் விதமாக மாற்றங்கள் தேவை.அப்பொழுதுதான் இம்மாதிரியான பாலியல் வக்கிரங்களை,வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும்.