புகைப்படங்கள் உதவி : புகைப்பட கலைஞர் பாலமுத்துகிருஷ்ணன், மதுரை…
மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்று திருப்பரங்குன்றம். இங்குள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், அறுபடை வீடுகளில் முதல் படை வீடு ஆகும். அதனால், நாள்தோறும தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
மதுரையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்தின் அருகிலேயே ரயில் நிலையம் உள்ளது. அதனால், பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் நேரடியாக இங்கு வந்து செல்கின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர், அன்றாட கூலி வேலைக்குச் செல்வோர் என நூற்றுக்கணக்கானோர், திருப்பரங்குன்றத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
அதனால், இங்குள்ள ரயில் நிலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும். ஆனால், ரயில் நிலையத்தின் உட்புறப் பகுதிகள் சுகாதாரமற்ற நிலையிலும், பாதுகாப்பற்ற சூழலிலும் உள்ளதாக பயணிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
முதல் மற்றும் அனைத்து நடைபாதைகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் இதனால், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளும் முழுமையாக இல்லை என்றும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றன்.
மேலும், நடைபாதைகளை அடைததுக் கொள்ளும் வகையில் முட்செடிகளும், சிறுசிறு மரங்களும் முளைத்து நடைபாதை முழுவதுமே புதர் மண்டிக் கிடப்பது போல காட்சியளிக்கிறது. இதனால், பள்ளி மாணவ, மாணவியர், பெண்கள், முதியோர் உள்ளிட்ட பயணிகள் ஒருமுனையில் இருந்து மறு முனைக்கு நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டுகின்றனர் உள்ளூர் சமூக ஆர்வலர்கள்.
ரயில் நிலையத்தை முறையாக பராமரித்து பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மதுரை மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் குற்றச்சாட்டாகும்.