கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே பிரபல ரவுடியை கொலை செய்து தலையை துண்டித்து கையில் எடுத்துச் சென்ற மற்றொரு ரவுடியை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொண்ட நிகழ்வு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்புராயலு நகரைச் சேர்ந்தவன் வீரா. கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் நிகழ்வுகளில் தொடர்புடைய இவன், அந்த பகுதியில் பிரபல ரவுடியாக நடமாடி வந்தான். நேற்றிரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல், அவனை வழிமறித்து கொடூரமாக வெட்டிச் சாய்ந்தது. பின்னர், வீராவின் தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். விடிய விடிய நடைபெற்ற தேடுதல் வேட்டையில், குடுமியான் குப்பம் பகுதியில் கொலையாளிகள் 6 பேர் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
அந்த பகுதியை முற்றுகையிட்ட காவல்துறையினர், சரணடைந்து விடுமாறு எச்சரித்தனர். ஆனால், அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்த தொடங்கியதுடன், தப்பியோடவும் முயன்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கிருஷ்ணன் என்பவன் நிகழ்விடத்திலேயே பலியானான். எஞ்சிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்த கும்பலிடம் இருந்து துண்டிக்கப்பட்ட வீராவின் தலையை போலீசார் மீட்டனர். கொலைக்கார கும்பல் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். என்கவுன்டரில் கொல்லப்பட்ட கிருஷ்ணனு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிதான் என்பது போலீசார் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கோபமாக கூறும் பொதுமக்கள், ரவுடிகள் ராஜ்யத்தை முழுமையாக அழிக்க, மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.