Sat. Nov 23rd, 2024

அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் சொந்த மாவட்டம் என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெற்று நங்கவள்ளி, வனவாசி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய நான்கு பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றக் கூடிய பெரும்பான்மை இருக்கின்றது என்ற காரணத்தினாலும் கடந்த 4.3. 2022 அன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காத சூழ்நிலையிலும், எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழாத சூழ்நிலையிலும், மிகப்பெரிய அரசியல் உள்நோக்கத்தோடு ஆளும் திமுக அரசுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடும் இந்த நான்கு பேரூராட்சிகளின் தேர்தல் அலுவலரான, பேரூராட்சி செயல் அலுவலர் நான்கு பேரும் ஒரே காரணத்தைச் சொல்லி பின் தேதி குறிப்பிடாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இந்த மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது என்ற பொதுவான அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வில் இந்த நான்கு பேரூராட்சிகளின் வெற்றி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பேரூராட்சி பிரதிநிதிகளின் சார்பாக ஆர்.எம். பாபு முருகவேல் எனும் நான் மனு தாக்கல் செய்திருந்தேன்.

அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வில் இன்று காலை நடைபெற்றது. மனுதாரர்களின் சார்பாக நானும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆகியோரும் ஆஜராகி அரசு அதிகாரிகளின் ஆளும்கட்சி சார்பு நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தோம். அரசு தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் அரசு தரப்பு சொல்லக்கூடிய காரணங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை, கடந்த 4.3.2022 அன்று நடந்த மறைமுக தேர்தலின் சிசிடிவி காணொளி பதிவை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அரசுத் தரப்பு பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வரும் திங்கட்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்து முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு ஆர்.எம்.பாபு முருகவேல் தெரிவித்தார்.