கள்ள வாக்கு செலுத்திய சர்ச்சையில், திமுக நிர்வாகியை தாக்கி, அரை நிர்வாண உடையோடு அழைத்து வந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, நகர்ப்புற மாநகராட்சித் தேர்தலின் போது கொரோனா விதிமுறைகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு எதிராக இரண்டாவது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனிடையே, 5 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்த வழக்கில், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, அவரது மருமகன் உள்ளிட்ட 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் 3 வது முறையாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், நில அபகரிப்பு வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை ஆலந்தூர் நீதிமன்றத் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் வழங்க கோரும் மேல்முறையீட்டு ஜாமீன் மனு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்குப் பின்னர், ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்த போதும், நில அபகரிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், ஜெயக்குமார் புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த போது நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளை அரசு உயரதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த முறைகேடுகள் குறித்து விரைவில் புகார் தெரிவிக்கப்பட்டு, அந்த வழக்கிலும் ஜெயக்குமாரை கைது செய்யும் நடவடிக்கையும் துரிதமாக நடைபெற்று வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.