Thu. Nov 21st, 2024

இயேசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40  நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். ஆண்டுதோறும் சாம்பல் புதன் அன்று இந்த தவக்காலம் தொடங்குகிறது.

 அதன்படி இன்று கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. சாம்பல் புதன்கிழமையான இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்று வருகிறது.

கிறிஸ்தவ  மக்களின் நெற்றியில் ஆயர்,  பங்குத்தந்தையர்கள், அருட்பணியாளர்கள் ஆகியோர் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு, “மனந்திரும்பு,  நற்செய்தியை நம்பு” என்று கூறினார்கள்.

மனிதர்களின் மரணத்தை நினைவூட்டும் வகையிலும், மனமாற்றம் அடைந்து புதுவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும் இந்த சாம்பல் நெற்றியில்  பூசப்பட்டு வருகிறது.

 தவக்காலமான 40 நாளும், அசைவ உணவை தவிர்க்கும் கிறிஸ்துவ மக்கள், ஆடம்பர செலவை குறைத்து, ஏழைகளுக்கு நிதியுதவி செய்து வருவார்கள். தவக்காலம் முழுவதும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவதுடன், குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயங்களில் இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தை நினைவூட்டும் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

மேலும், திருமணம், பிறந்தநாள், புதுமனை புகுவிழா  உள்ளிட்ட எந்தவிதமான கொண்டாட்டங்களிலும் இந்த 40 நாட்களும் கிறிஸ்துவர்கள் ஈடுபடமாட்டார்கள்.

இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 4ம்  தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய வியாழக்கிழமை பெரிய வியாழனாகவும், அடுத்தநாள் புனித  வெள்ளியாகவும் கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு தனது சீடர்களுக்கு  அவர் கடைசி இரவு உணவு வழங்கியது நினைவு கூறப்படும்.