உக்ரைனில் 6 வது நாளாக நடைபெற்று வரும் போரால், தலைநகர் உள்பட பல்வேறு நகரங்களில் குண்டு மழை சத்தம் 24 மணிநேரம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ரஷ்ய ராணுவத்தின் உக்கிரமான தாக்குதலை தாக்குப் பிடிக்காமல் உக்ரைன் ராணுவம் பின்வாங்கி வருவதால், உள்நாட்டு மக்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள, அந்நாட்டின் மேற்கு பகுதியை நோக்கி சாரை சாரையாக நடந்தே சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை மீட்கும் பணியும் முனைப்புடன் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், ஒன்றிய அரசின் அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள், உக்ரைனையொட்டியுள்ள நாடுகளுக்கு விரைந்து சென்றுள்ளனர். நேற்று முதல் அடுத்தடுத்த நாட்களில் 26 இந்திய விமானங்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் தாய் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுவிடுவார்கள் என்று ஒன்றிய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைனில் இருந்து தாய் நாட்டிற்கு திரும்பிய இந்தியர்களை, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி, மீட்பு பணியில் ஈடுபட்ட விமானத்திலேயே பாசமழை பொழிந்து வரவேற்றார். விமானத்தில் பயணித்த இந்தியர்களை, அவர் அவரது தாய்மொழியில் பேசி வரவேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். ஒன்றிய அமைச்சர் தங்கள் தாய்மொழியில் பேசியது,கேரளம், குஜராத், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த 24 மணிநேரத்தில் உக்ரைனில் இருந்து 8000 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாய் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். உலகின் வல்லரசு நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவே, உக்ரைனில் உள்ள அந்நாட்டு மக்களை கடும் பனிப்பொழிவின் காரணமாக கூறி விமானங்களை அனுப்பாமல் அமைதி காத்து வரும் நிலையிலும், உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் விரைவாக அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நிலையிலும், ஒன்றிய அரசு, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க விமானங்களை அனுப்பி வைத்துள்ளதை கே.அண்ணாமலை பெருமிதத்துடன் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவல் இதோ…