மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிக்கூடம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான விற்பனைக்கடையை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் அருகே மதுபானக் கடைகள் வைக்க அது ஒன்றும் மளிகைக் கடையோ புத்தகக் கடையோ இல்லை.
ஒட்டுமொத்த தமிழகமும் மதுவில் மூழ்கியுள்ளது. அதைப் பற்றி மாநில அரசு கவலைப்படவில்லை. மாநிலத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மதுபானம் ஆறாக ஓடுகிறது. பூரண மதுவிலக்கை, ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக பார்க்க வேண்டும்.
பூரண மதுவிலக்கை ஏற்படுத்தினால், குற்றங்கள் குறையும், தனிநபர் வருவாய் உயரும், குடிமக்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும், இவை உள்பட மாநிலத்தில் பல்வேறு மேம்பாடுகள் ஏற்படும். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.