Fri. Nov 22nd, 2024

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் உள்பட அனைவருக்கும் உடனடியாக பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நேற்றூ ஒரேநாளில் 4 ஆயிரத்து 99 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 986 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊழியர்களுக்கு தற்போது குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவ ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், நாளை முதல் 10-ம் தேதி வரையும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட குளிர்கால விடுமுறையை டெல்லி எய்ம்ஸ் ரத்து செய்துள்ளது. மேலும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு வர வேண்டும் எனவும் டெல்லி எய்ம்ஸ் உத்தரவிட்டுள்ளது.