தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்ட போது, விழா மேடையில் அமர்ந்திருந்த காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்துவிட்டார் என தொடரப்பட்ட வழக்கு விசாரணை , சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுவாமிநாதன், தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம் இல்லை என்று தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது, பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாவை பயன்படுத்தக் கூடாது என்றும் பயிற்சி பெற்றவர்கள் மூலம்தான் பாட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சேலத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பயிற்சி பெற்ற மகளிர், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கணீர் குரலில் இனிமையாக பாடி அசத்தினர்.
அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட விழாவில் கலந்துகொண்ட அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு தாய் மொழி பற்றோடு அனைத்து தரப்பினரும் மரியாதை தர வேண்டும் என்று நேற்று தமிழக அரசு பிறப்பித்திருந்த உத்தரவு, ஒரே நாளில் அமலுக்கு வந்தது தமிழ் பற்றாளர்களிடம் பேரானந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.