Tue. Apr 30th, 2024

மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு வருடமாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் மனவுறுதியை கண்டு அஞ்சிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதன்படி, இன்று காலை நாடாளுமன்ற மக்களவை கூடியதும், விவாதம் இன்றி 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டன.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதனையடுத்து, இரண்டு அவைகளிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, இரு அவைகளும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் செயலை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி. இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து இதோ….

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முன்பாக,அனைத்து விவாதத்திற்கும் நாங்கள் தயார் என்றார் பிரதமர் மோடி . ஆனால் எந்தவித விவாதமும் இல்லாமல் விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. மோடி அரசு ஏன் விவாதங்களுக்குப் பயப்படுகிறது?

விவசாயிகளின் மற்ற முக்கியமான கோரிக்கைகளுக்கு மோடி அரசின் பதில் என்ன? குறைந்தபட்ச ஆதரவு விலை,விவசாயத்திற்கு எதிரான மின்சார மசோதா,போராட்ட வழக்குகளை திருப்பப்பெறுதல்,விவசாயிகளை படுகொலைக்குப் பின் உள்ள ஒன்றிய இணை அமைச்சர் பதவி விலகல் இவை பற்றி ஏன் மோடி அரசு பேச மறுக்கிறது?

இந்த கோரிக்கைக்காக நாடாளுமன்ற மாநிலங்களவையில் போராடிய காங் உள்ளிட்ட 12 எதிர்கட்சி எம் பி கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது குற்றமா? மோடி அரசின் அராஜகம் எல்லை மீறுகிறது. பாஜகவின் தேர்தல் தோல்வி மட்டுமே இந்த தேசத்தை காப்பாற்றும்.

இவ்வாறு ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.