Sat. Nov 23rd, 2024


சேலம் மாவட்டத்தில் வெற்றிப் பயணத்திற்கு திரும்புமா, ஆளும்கட்சியான திமுக…

வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பிறகு சேலம் மாவட்ட திமுகவின் எதிர்காலம் மங்கத் துவங்கிவிட்டது என்று அவரது தீவிர ஆதரவாளர்கள் பேசும் அளவிற்குதான் சேலம் மாவட்டத்தில் திமுக செயலாளர்களின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. அதன் எதிரொலிதான் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளை அதிமுக கூட்டணியிடம் பறி கொடுத்தது சேலம் மாவட்ட திமுக.
அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், 10 ஆண்டுகளுக்கு பிறகு நகரம் முதல் கிராமம் வரை சோம்பிக் கிடந்த திமுக நிர்வாகிகள், சோம்பலை முறித்துகொண்டு உற்சாகத்துடன் திரள வைத்த பெருமை நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவையே சாரும்.
சேலம் மாவட்ட பொறுப்பாளராக, திமுகவின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட அந்த நிமிடத்திலேயே சேலம் மாவட்ட திமுகவினரிடம் உற்சாகம் பீறிட துவங்கிவிட்டது. சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதையடுத்து முதல்முறையாக அமைச்சர் கே.என்.நேரு, இன்று காலை சேலம் வந்தார். அவரின் வருகையை கொண்டாடும் வகையில், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மற்றும் சேலம் மத்திய மாவட்டம் என மூன்று தலைமைகளின் கீழ் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் ஒற்றுமையாக ஒன்று கூடி, உற்சாக வரவேற்பு கொடுத்து அமைச்சர் கே.என்.நேருவை திக்குமுக்காட வைத்துவிட்டனர். அவருடைய சொந்த மாவட்டமான திருச்சியில் கூட இந்தளவுக்கு எழுச்சியாக வரவேற்பு கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான் என்று பூரிப்போடு கூறினார், சேலம் திமுக முன்னோடி ஒருவர்.


அதே உற்சாகத்தோடு மூன்று மாவட்ட பொறுப்பபாளர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சேலம் ஐந்துரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேடையில் பாரபட்சம் இல்லாமல் அனைத்து முக்கிய நிர்வாகிகளுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவரும், சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான ஆ.ராஜேந்திரன் எம்எல்ஏ, சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்களான முறையே எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி, சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் உள்பட முக்கியமான நிர்வாகிகள், தங்கள் மனதில் பட்ட கருத்துகளை வெளிப்படையாகவே பேசலாம் என்று அமைச்சர் கே.என்.நேரு அனுமதி வழங்கியிருந்தார்.
மாவட்ட பொறுப்பாளர்களான மூன்று பேரும் வழக்கம் போல முந்தைய அதிமுக ஆட்சியின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீதான விமர்சனத்தை முன் வைத்து பேசினர்.

ஆனால், அடுத்தடுத்து பேசிய முக்கிய நிர்வாகிகள், சேலம் மாவட்ட திமுகவில் உள்ள கோஷ்டிப் பூசலை மேடையிலேயே போட்டு உடைத்தனர். கோஷ்டிப் பூசலைப் பற்றி பிரதானமாக பேசும்போதெல்லாம், எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆர்.ராஜேந்திரன் எம்எல்ஏ, டி.எம்.செல்வகணபதி ஆகியோர் முகத்தில் ஈயாடவில்லை. அதேசமயம், மேடையேறி பேசியவர்களில் கோஷ்டிப் பூசலை அழுத்தம் திருத்தமாக சொல்லும் போது, கூட்டத்தினரிடையே கைத்தட்டல் பலமாக கேட்டது. அதற்கு சற்றும் குறையாமல் வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரை உச்சரித்தபோதும், கூட்டத்தில் பரவலாக விசில் சத்தம் எழுந்தது.

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தின் மூன்று ஆண் வாரிசுகளில் இளையவரான ( ஆ.செழியன், ஆ.ராஜா ஆகியோர் காலமாகிவிட்டனர்) வீரபாண்டி ஆ.பிரபுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளரான தனது சகோதரர் ஆ.ராஜா மறைந்து ஒரு மாதம் கூட ஆகாததால், அவரின் மறைவால் ஏற்பட்ட சோகத்தை நினைவுக்கூர்ந்து தன்னால் எதுவும் பேச முடியவில்லை என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டு வீரபாண்டி ஆ.பிரபு மௌனமாக இருக்கைக்கு திரும்பி சென்றுவிட்டார்.

மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் கட்சி பதவி வகிக்கும் நிர்வாகிகளில் பலர், சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர்களின் சுயநல போக்கால் திமுகவின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்று உண்மையை பேசினால், தாங்கள் வகித்து வரும் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில், பூசி மொழுகி பேசிவிட்டு அமர்ந்தனர். ஆனால், மகளிர் அணி நிர்வாகியான சங்ககிரி நிர்மலா, சேலம் திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசலலை, அறுவைச் சிகிச்சை செய்வதைப் போல, யாருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக பேசி, சேலம் மாவட்டத்தில் திமுகவின் வீழ்ச்சிக்கு யார், யாரெல்லாம் காரணமாக இருக்கிறார்கள் என்று போட்டு உடைத்துவிட்டார். அவரின் பேச்சை அமைச்சர் கே.என்.நேருவும் உண்ணிப்பாகவே கவனித்தார்.


சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் பேசும்போது, எடப்பாடி பழனிசாமியையும், முந்தைய அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்ச்சித்தார். தொடர்ந்து பாரப்பட்டி சுரேஷ், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் பேசினார்கள்.
ரேகா பேசும்போது, மாநகராட்சி மேயர் தேர்தலை மனதில் வைத்து, வீரபாண்டியாருக்குப் பிறகு உங்களைதான் (கே.என்.நேரு) நாங்கள் நம்பியிருக்கிறோம் என்று உருக்கமாக பேசி ஐஸ் வைத்தார்.

மிகுந்த எதிர்பார்ப்போடு திமுக நிர்வாகிகள் அமைதியாக காத்திருந்த நேரத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

ஒட்டுமொத்த கூட்டத்தினரின் மனதை கண்களாலேயே படித்திருந்த அவர், எடுத்த எடுப்பிலேயே என்னிடம் ஒன்றுமில்லை, வீரபாண்டியார் வாழ்ந்த மண். அவர் எப்படி செயல்பட்டாரோ, அதேபோல் நானும் செயல்படுவேன். கட்சிக்காக உண்மையாக யார் அதிகமாக உழைத்தாலும் அவர்களை நாங்கள் கைவிட மாட்டோம். எவ்வளவு பணம் பலம் வந்தாலும், எதிர்ப்புகள் வந்தாலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற பதவிகளிலும் வெற்றி பெற்று சேலம் மாவட்டத்தில் திமுக மீண்டும் வலுவான நிலைக்கு வந்துவிட்டது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். கழக தோழர்களின் எண்ணத்தை கேட்டு செயல்பட்டால் தான் வெற்றி கிடைக்கும் என்பதனை உறுதியாக நம்புகிறவன் நான். சேலத்தில் உள்ள கழக தோழர்களின் எண்ணத்தை கேட்டு அதனை ஆராய்ந்து செயலாற்றி வெற்றியை எட்டுவோம். திமுகவில் வேண்டியவர்கள் வேண்டாதவர் என்று ஒன்றும் இல்லை, கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய பதவிகள் வந்து சேரும். கோஷ்டிப் பூசலே சேலத்தில் இல்லை என்று நிரூபிப்பதற்கு, அனைத்து நகரப்பகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூடியது என்ற மகிழ்ச்சிக்கரமான செய்தியான், முதல்வரின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் போல பதிய வேண்டும். சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகளில் வெற்றி பெற்று திமுக மீண்டும் வலுவான நிலைக்கு வரும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை.

கூட்டத்தினரிடம் காணப்பட்ட உணர்ச்சி பெருவெள்ளம் அமைச்சர் கே.என்.நேருவிடம் தோற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன்பு சேலம் மாவட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை வந்திருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, பல்வேறு கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார். ஆனால், இன்றைக்கு அவரின் பேச்சு, மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. சேலம் மாவட்டம் அதிமுக கோட்டையாக மாறியிருப்பதை அவரால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை என்பதை அவரின் உரையின் சில வார்த்தைகள், சொல்லாமல் சொல்லியதாக, மூத்த திமுக நிர்வாகி ஒருவர் கூறினார்.

மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் சேலத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடக்கும் போதுதான் திமுக உறுப்பினர்கள் ஆரவாரமாக வருவார்கள். ஆனால், பத்தாண்டு காலமாக அதுபோன்ற எழுச்சியை பார்க்க முடியவில்லை. அமைச்சர் கே.என்.நேருவின் வருகையால் இன்றைக்குதான் அந்த எழுச்சியை கண்கூடாக காண முடிந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சேலம் மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டிருந்த போது கூட, அவரும் மிகுந்த ஈடுபாட்டுடனே உழைத்தார். ஆனால், அவருக்கு கட்டுப்படாத சேலம் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள், மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல, அமைச்சர் கே.என்.நேருவிடம் கட்டுண்டு கிடந்ததை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆ.ராஜேந்திரன் எம்எல்ஏ, டி.எம்.செல்வகணபதி ஆகிய மூவரை விட திமுகவில் சீனியர் தலைவர் அமைச்சர் கே.என்.நேரு. இப்போது முதன்மை செயலாளராகவும் உள்ள அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சண்டை போட்டு கூட தான் நினைக்கிற காரியத்தை சாதித்துவிடுவார். அவர் மீதான பயத்தில்தான், மூன்று மாவட்ட நிர்வாகிகளும் ஸ்கூல் பையன்கள் போல, அடுக்கம் ஒடுக்கமாக நடந்து கொண்டார்கள்.

ஒட்டுமொத்த சேலம் மாவட்ட திமுகவுமே, கே.என்.நேருவின் வருகையால் சேலம் மாவட்ட திமுகவுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் கூட்டம் முடியும் வரை காத்திருந்துவிட்டு நம்பிக்கையோடு புறப்பட்டு சென்றார்கள். இத்தனைக்கும் மேடையில் வைக்கப்பட்ட பதாகையில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் புகைப்படமே இல்லையே என்ற வருத்தம் இருந்தாலும் கூட, சேலம் மாவட்டத்தில் பத்து தொகுதிகளை அதிமுக கூட்டணியிடம் பறி கொடுத்துவிட்டோமே என்ற அவமானத்தால் சோகமாக இருந்த திமுக உறுப்பினர்கள், அதில் இருந்து மீண்டு இன்றைக்குதான் உற்சாகமாக புறப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த எழுச்சியையும், உற்சாகத்தையும், ஆவேசத்தையும் ஊதி, ஊதி பெரிதாக்கினால், சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி தேர்தல்களில் மட்டுமல்ல, மாநகராட்சி தேர்தல்களிலும் திமுகவே வெற்றி கொடியை பறக்க விடும்..


திமுக உறுப்பினர்களை உசுப்பேற்றியும், வெறியேற்றியும் தேர்தல் கள பணியாற்ற வைக்கும் வித்தையெல்லாம் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கை வந்த கலை. இனி வரும் ஒவ்வொரு நாளும் சேலம் மாவட்ட திமுகவுக்கு உற்சாக திருநாள்தான் என்று மகிழ்ச்சியோடு கூறினார்கள், எந்த கோஷ்டியையும் சேராத சேலம் மகளிர் அணியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள்…