தொடர் கனமழையின் காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை அகற்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வரும் நிலையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வட சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, வெள்ள நீரை விரைந்து வெளியேற்றுமாறு மாநகராட்சி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரும் நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என முதல்வர் அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, மழை நீர் புகுந்துள்ள வீடுகளுக்கு உள்ளே சென்று பார்வையிட்டதுடன் அங்கு தங்கியுள்ள மக்களை உடனடியாக பள்ளிக்கூடம் உள்ளிட்ட சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக முகாம்களுக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
வெள்ள நீர் வடியும் வரை மழை நீர் தேங்கியுள்ள வீடுகளில் தங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுடன் அவர்களுக்கு மதிய உணவுளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தென் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். சைதாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களை, அரசு ஏற்பாடு செய்துள்ள தற்காலிக முகாம்களுக்கு செல்லுமாறு கேட்டு கொண்டதுடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் அமைச்சர் வழங்கினார். காலை முதல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மீட்பு மற்றும் வடிகால் பணிகளையும் அவர் துரிதப்படுத்தி வருகிறார்.