Tue. Dec 3rd, 2024

தமிழ்நாட்டில் எல்லை மாவட்டமான தேனி மாவட்டத்தின் அருகே முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணை பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்காக பல லட்சம் ரூபாயை தமிழக அரசு செலவழித்து வருகிறது.

கேரளா மாநிலத்தில் பெருமளவில் கனமழை பெய்து வெள்ளம், இயற்கை சீற்றம் ஏற்படும் போதெல்லாம், அம்மாநில அரசு, முல்லை பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர்ன் காரணம் என்று புகார் தெரிவித்து வருகிறது. அம்மாநில அரசை சூடேற்றும் வகையில் கேரள அரசியல்வாதிகளும் தமிழக அரசுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டும் வரும் நிலையில், பெரியாறு அணை உடையும் நிலையில் உள்ளது என்றும் பாதுகாப்பற்ற நிலைக்கு மாறிவிட்டது என்றும் கேரளம் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால், உண்மை நிலையை கண்டறியும் நிலையில் இல்லாத கேரள மக்கள் மனதிலும் அணை பாதுகாப்பு குறித்து மாறுபட்ட மனோநிலை ஏற்பட்டுவிடுகிறது.

இந்தநிலையில் கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணையை 139க்கும் கீழாக குறைக்க வேண்டும் என்றும் அம்மாநிலத்தில் உள்ள ஒரு சிலர் கோரிக்கை விடுத்த நிலையில், அதை ஊதி பெருசாக்கும் வகையில் கேரளாவில் பிரபலமான நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் இந்த அணையை மொத்தமாக கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்திற்கும் சென்றுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும் கீழாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஜாய் ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

ஏற்கெனவே இந்த அணை தொடர்பான வழக்கின் முந்தைய விசாரணையில் முல்லை பெரியாறு நீர் மட்டத்தை குறைக்க வேண்டியது இல்லை என்று கண்காணிப்பு குழுவும், மத்திய அரசும் தெரிவித்துவிட்டது. இதற்கு தமிழக அரசு அளித்த பதிலில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது. அங்கு 142 அடி வரை நீர் தேக்க முடியும் என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 126 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணை மிகுந்த பலவீனமாக இருப்பதாகவும் இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டிய தேவை இருப்பதாகவும் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் 5 மாவட்டங்களில் உள்ள 30 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்கும் என்று கேரள அரசு கூறியுள்ளது.

142 அடிக்கு தண்ணீர் சேமிக்கலாம் என்ற மேற்பார்வைக் குழுவின் கருத்தை ஏற்க முடியாது என்றும் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்த கூடாது என்றும் கேரள அரசு கூறியது. இதைத் தொடர்ந்து மேற்கண்ட வழக்கின் விசாரணை மீண்டும் இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், சிடி ரவிக்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 139.5 அடி வரை மட்டுமே தேக்கிவைக்க வேண்டும். அடுத்த விசாரணை வரை இவர்கள் நீரின் அளவை உயர்த்த கூடாது என்று வாதிட்டார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 139.5 அடி வரை தேக்கி வைக்க முடியும். நவம்பர் 10 வரை மட்டுமே எங்களால் இந்த நீரின் அளவை தேக்கி வைக்க முடியும். அதற்கு பின் நாங்கள் நீரின் அளவை உயர்த்துவோம் என்று வாதிட்டார்.

இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன், நவம்பர் 10ம் தேதி முல்லை பெரியாறு அணை நீரின் அளவை 139.5 அடி வரை தேக்கி வைக்க வேண்டும் என்றும் நவம்பர் 8ம் தேதிக்குள் கேரளா அரசு புதிய பிரமாண பத்திரத்தை முழுமையான விவரங்களோடு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.