Sat. May 18th, 2024

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் முதன்மையான கவனத்தை செலுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி விட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு, சிறப்பு மருத்துவ முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு காலை முதல் இரவு வரை சுகாதார பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர். இதேபோல, நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்படைந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தியா படைத்துள்ள புதிய சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் இதோ:

100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது.நாம் இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியைக் கண்டு கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் விஞ்ஞானம், சுறுசுறுப்பு, 130 கோடி மக்களின் உற்சாகமே சாதனைக்கு காரணம். வாழ்த்துகள் இந்தியா. 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியருக்கு நன்றி.இந்த சாதனையை எட்ட உதவி ஒவ்வொருவருக்கும் நன்றி.

இவ்வாறு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.