Sun. Nov 24th, 2024

உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் பன்னாட்டு நிறுவனமான சொமேட்டோ தன்னுடைய வாடிக்கையாளர்கள் சிறிதளவாவது ஹிந்தி மொழி கற்றிருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது, தமிழகத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக அரசு ஏற்கெனவே ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் திணிப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், சொமேட்டோ நிறுவனத்தில் தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவரிடம் தனது குறை குறித்து பேச வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு அந்த நிறுவத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் அளித்த பதிலில், இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி. அந்த மொழியை சிறிதளாவது கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறும் அளவிற்கு கருத்து தெரிவித்துள்ளது..

தமிழ்நாட்டில் முதலீடு செய்து, பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ள அந்த நிறுவனம், மொழி வெறியோடு பதிலளித்துள்ளது அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பன்னாட்டு நிறுவனமான சொமேட்டோவின் மொழி வெறிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, மாநில மொழியில் பேசுவதை அந்த நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஹிந்தி தெரியாது போடா என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி எம்.பி.யின் டிவிட்டர் பதிவு

இதுபோல பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சொமேட்டோ தனது மொழி திணிப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய பணியாளரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.