Sun. Nov 24th, 2024

திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் துணை பொதுச் செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக, அதன் பின்னர் தலைவராகவும் கடந்த 20 ஆண்டு காலத்திற்குள் படிப்படியாக உயர்ந்த நிலையிலும், தற்போது முதல் அமைச்சராக ஆட்சி புரிந்து கொண்டு வரும் இந்த நேரத்திலும், மு.க.ஸ்டாலினிடம் இருந்து சிறிதளவும் சினம் வெளிப்படாததை பார்த்து ஆச்சரியத்தோடு ஆனந்தப் படுகிறார்கள் அவருடன் நெருங்கிப் பழகும் திமுக முன்னணி தலைவர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு திமுக இளைஞரணி செயலாளராக இருந்த காலத்தில், பல சமயங்களில் அவர் கோபபட்டதைப் பார்த்து இளைஞரணி நிர்வாகிகள் அச்சம் கொண்டு ஒடுங்கிப் போய் இருக்கிறார்கள்.கட்சிக்குள்ளாகவோ அல்லது பொது தளத்திலோ எந்தவொரு நிர்வாகியோ ஜனநாயகத்திற்கு விரோதமாகவோ அல்லது கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களிலோ ஈடுபட்டு, அதன் மூலம் திமுக தலைமையின் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி செயலாளராக வலம் வந்த மு.க.ஸ்டாலினை நேருக்கு நேராக எதிர்கொள்வதற்கு அஞ்சி ஓட்டம் பிடித்த காலமெல்லாம் உண்டு.

அந்தளவுக்கு தளபதிக்கு கோபம் வரும் என்று பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசும் திமுக முன்னணி நிர்வாகிகள், செயல் தலைவர், தலைவர், முதல் அமைச்சர் என அடுத்தடுத்து உச்ச பதவிகளில் அமர்ந்த போது தளபதி மு.க.ஸ்டாலினிடம் இருந்து கடும் சொற்களே வந்ததில்லை. தலைமைச் செயலகத்திலோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சியினரை சந்திக்கும் போது சிறிதளவு கூட கோபத்தை வெளிப்படுத்தாத அளவுக்கு சாந்த சொரூபியாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று மெய் சிலிர்த்துப் பேசுகிறார்கள் திமுக முன்னணி தலைவர்கள்.

அதுவும் தலைமைச் செயலகத்தில் அரசுப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில், முதல்வர் அறிவுரை கூறியிருக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் அரசு மட்டத்தில் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் கூட, அதனை மிகவும் பொறுமையாக சுட்டிக்காட்டி திருத்தம் செய்வதற்கு அனுமதி வழங்குவதை கண்டு பலமுறை வியந்து போயிருக்கிறோம் என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.

இப்படி திமுக எனும் மாபெரும் இயக்கத்திற்கு தலைவராகவும் தமிழ்நாட்டிற்கு முதல் அமைச்சராகவும் சேவையாற்றி வரும் மு.க.ஸ்டாலினே சினத்தை கட்டுக்குள் வைத்து, அமைதியாக ஆட்சியாக புரிந்து கொண்டிருக்கும் போது, தலை இருக்கும் போது வால் ஆடக் கூடாது என்று சொல்லும் அளவுக்குதான் மாவட்ட, ஒன்றிய அளவில் உள்ள திமுக நிர்வாகிகள், தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று சொல்கிற அளவுக்கு ஆட்டம் போட்டு, திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள் என மனம் வேதனைபட்டு புலம்புகிறார்கள் அண்ணா அறிவாலய நிர்வாகிகள். அந்தவகையில், காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசனின் அநாகரிக செயல் ஒன்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறும் திமுக நிர்வாகிகள், எழிலரசனை கடுமையாக முதல்வர் எச்சரித்த தகவலையும் கசிய விட்டுள்ளார்கள்.

சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வுக்கு சென்றுள்ளார். அவருடன் சென்ற திமுக எம்எல்ஏ எழிலரசன், அரசு அதிகாரிகளை அநாகரிகமான வார்த்தைகளில் வறுத்தெடுத்துள்ளார். அமைச்சர் இருக்கிறார், ஆட்சியர் இருக்கிறார் என்பதை பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல், திமுக எம்எல்ஏ எழிலரசன் பேசிய பேச்சுதான், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

அநாகரிகமாக பேசிய திமுக எம்எல்ஏ எழிலரசனின் பேச்சு  வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வாட்ஸ் அப்பில் பரவ, அந்த வீடியோ பதிவு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கும் உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அதை பார்த்துதான், ஒன்றிரண்டு பேரின் அநாகரிக நடவடிக்கைகளால்தான் திமுகவுக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று நொந்து கொண்டதாகவும், உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக எம்எல்ஏ எழிலரசனை எச்சரித்தாகவும், காஞ்சிபுரம் மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள் தகவல்களை கசிய விடுகின்றனர்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.

அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள்  இந்த திருக்குறளை மனதில் நிறுத்தி செயல்படுவது அவர்களுக்கு நன்மை பயக்கும்… திமுக எம்எல்ஏ எழிலரசனுக்கு புரிய வைத்தால், அவரது அரசியல் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்….