Sun. Nov 24th, 2024

அதிமுகவின் 50 ஆம் பொன் விழா ஆண்டு கொண்டாட்டங்கள், எதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமாக கேலிக்குள்ளாகி போனதை கண்டு மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் ஆத்மாக்கள் ரத்தக் கண்ணீர் வடித்திருக்கும் என்கிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

கடந்த பிப்ரவரி முதல்வாரத்தில் பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த விகே சசிகலா, அதிமுகவை கைப்பற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில்தான், அதீத பிராயத்தனமெல்லாம் செய்தார். ஆனால், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வரை அவரின் எந்தவொரு அரசியல் சாணக்கியத்தனமும் வெற்றிபெறவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக துடைத்தெறியப்பட்டவுடன் இதுதான் சரியான நேரம் என்று அதிமுகவிற்குள் குழப்பம் விளைவித்து மீன்பிடிக்க தயாராகிவிட்டார் விகே சசிகலா என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 பொன்விழா ஆண்டு துவக்க நாளான நேற்றும், நேற்று முன்தினமும் விகே சசிகலா நடத்திய அத்தனை அரசியல் விளையாட்டுகளிலும், அதிமுகவில் பகுதிச் செயலாளராக, வார்டு செயலாளராக பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளில் ஒருவர் கூட அவரது அரசியல் நாடகங்களை கண்டுகொள்ளவில்லை.  இத்தனைக்கும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் அவர்தான் என்று அவருக்கு பில்டப் வேறு கொடுக்கப்பட்டது. செல்வி ஜெயலலிதா மறைந்து 5 ஆம் ஆண்டை நெருங்கும் இந்த நேரத்தில், அவரின் அரசியல் பிரவேசத்திற்கு மாநிலம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

அதிமுகவில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக விகே சசிகலா முழுவீச்சில் களத்திற்கு வந்துள்ள இந்த நேரத்தில், அவரை செல்வி ஜெயலலிதாவை விட மிஞ்சிய ஆளுமையாக கட்டமைத்த டிடிவி தினகரனின் சத்தத்தையே காணோம். அதிமுகவை மீட்பதாக கூறிதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அவர் தனியே தொடங்கினார். இருந்தாலும்கூட அவருக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்த கட்சி, அதிமுகவும், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவும்தான்.

அதிமுகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அவரை நம்பி நின்றதற்கு காரணம், அதிமுகவின் தலைமைப் பொறுப்பை என்றாவது ஒருநாள் ஏற்பார், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நன்றி மறந்த கூட்டத்தை விரட்டியப்பார் என்பதால்தான் அவர் பின்னால், மாநிலம் முழுவதும் மூத்த அதிமுக நிர்வாகிகள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர், தங்களின் அரசியல் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் அவர் பின்னால் அணி திரண்டனர்.

அமமுகவை துவங்குவதற்கு முன்பு வரை, அதிமுகவை மீட்போம் என்றுதான் டிடிவி தினகரன் சூளுரைத்து வந்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, விகே சசிகலாவோடு இணைந்து டிடிவி தினகரன் பயணிப்பதை, அவரது உறவுகளே (மன்னார்குடி கும்பல்) ரசிக்கவில்லை என்று கூறப்பட்டு வருவதை நிரூபிக்கும் வகையில்தான் டிடிவி தினகரனின் தலைமறைவு வாழ்க்கை உள்ளது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நலம் விரும்பிகள்.

விகே சசிகலா குடும்பத்து உறவுகளுக்குள்ளேயே, அவர் தனித்து விடப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுவது ஒருபக்கம் இருக்க, அவரின் இன்றைய அரசியல் நிலைபாடு தொடர்பாகவும் பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில், டிடிவி தினகரன், அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி அமைதி காத்து வருவதுதான் அவரை நம்பி அமமுகவிற்கு வந்த முன்னணி நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம், அதிமுகவில் பல்வேறு பதவிகளை வகித்த டிடிவி தினகரன், அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி ஒரு வாழ்த்துச் செய்தி கூட வெளியிடாததைக் கண்டு, இன்றைக்கும் அதிமுகவில் இருக்கும் அவரது நலம்விரும்பிகளுக்கும் மிகப்பெரிய மனவவலியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் ஒட்டுமொத்த மனவருத்தத்திற்கான காரணம் இதுதான்…

செல்வி ஜெயலலிதா மறைந்த பிறகு தர்மயுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வத்தின் சுயநல போராட்டத்தினால், இரட்டை இலையும், அதிமுக எனும் கட்சி பெயரையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆரும், செல்வி ஜெயலலிதாவும் தங்கள்  உயிரைவிட உன்னதமாக போற்றி வந்த கட்சி சின்னமும், கட்சிப் பெயருக்கும் ஆபத்து வந்த போது, தனியொருவராக துடிதுடித்து, அதனை மீட்பதற்கு  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார், அப்போதைய அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரன். அதனை மீட்பதற்காக லஞ்சம் கொடுத்ததாக கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் சிக்கி, திகார் சிறை வரை சென்று வந்தார் டிடிவி தினகரன்.

அப்படிபட்ட டிடிவி தினகரன், அதிமுக பொன்விழாவையொட்டி, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரின் மீது உண்மையான பக்தி கொண்டிருப்பவர் என்பதை அரசியல் உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், விகே சசிகலா வலியுறுத்தியதைப் போல, அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பொத்தம் பொதுவாக  ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கலாம்.

அதிமுகவைத் தோற்றுவித்த எம்ஜிஆர் மறைந்த காலத்தில் இருந்தே செல்வி ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தவர் டிடிவி தினகரன். அதற்கு பரிசாகவே, செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்திலேயே எம்.பி பதவி, பொருளாளர் பதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இப்படி உயர்ந்த பதவிகளோடு அதிமுகவில் வலம் வந்த அவர், தனக்கு அரசியல் வாழ்வை கொடுத்த கட்சிக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில், எம்ஜிஆரின் தியாகத்தை, செல்வி ஜெயலலிதாவின் தியாகத்தை போற்றி ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டிருக்கலாம். ஆனால், ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஒதுங்கியதும், அமமுக சார்பில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆருக்கும், செல்வி ஜெயலலிதாவுக்கும் மரியாதை செலுத்தாமல் தவிர்த்ததும் எங்கள் மனங்களில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாக கண்ணீர் சிந்துகிறார்கள் டிடிவி தினகரனின் வரவை எதிர்பார்த்து அதிமுகவில் காத்திருக்கும் அவரது விசுவாசிகள்.

இதேபோல, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மீதும் அவரது புதல்வர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதும் அதிமுக நிர்வாகிகள் கோபப் பார்வை வீசுகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலின் போது எந்தவொரு காரணமும் இல்லாமல், அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்ததால்தான் பாமக எம்எல்ஏக்கள் ஐந்து பேர் சட்டப்பேரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். இன்றைக்கும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் அதிமுக பொன்விழாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளன. ஆனால், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு, ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்புவதற்கு கூட மனம் இல்லாமல் போய்விட்டது.

அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டிருந்தாலும் கூட, அவரது புதல்வரும், பாமக இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இன்றைக்கு எம்.பி.யாக இருப்பதற்கு காரணம் அதிமுக எம்எல்ஏக்களின் வாக்குகள்தான். அந்த நன்றிக்காவது அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்திருக்கலாம்.

இதையெல்லாம் விட வன்னியர்களுக்கான 10.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை, அதிமுக கட்சிக்குள்ளாகவே பலத்த எதிர்ப்பு எழுந்த போதும் அதை பொருட்படுத்தாமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் சட்டப்பேரவையில் அவசர அவசரமாக தாக்கல் செய்தவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மிகுந்த நெருக்கடியில் இன்றைக்கு அவர் சிக்கியிருக்கும் போது ஒரு வாழ்த்துச் செய்தி வெளியிட்டு, இபிஎஸ் மனதையாவது குளிர வைத்திருக்கலாம் மருத்துவர் ராமதாஸ் என்கிறார்கள், இருவருக்கும் பாலமாக இன்றைக்கும் இருந்து வரும் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

அரசியலில் மட்டுமல்ல தனிமனித வாழ்க்கை,  பொதுவாழ்க்கை என அனைத்துவிதமான உயர்விலும் ஏற்றிவிட்ட ஏணியை உதைப்பதுதான் உயர்ந்த மனிதர்களின் பண்பாக உள்ளது என்று நொந்து கொள்கிறார்கள் அதிமுக மூத்த தலைவர்கள்.