சென்னை சிந்தாரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூவம் ஆற்றங்கரையோரம் வசித்து வந்த விளிம்பு நிலை மக்கள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு துரைப்பாக்கம் அருகில் உள்ள கண்ணகி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கு வசித்து வரும் நிலையில், அந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த, ஐஏஎஸ் அதிகாரியான வெ.இறையன்புவின் வழிகாட்டுதலின் மூலம், பொதுச்சேவையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், டாக்டர் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தை துவக்கி, கண்ணகி நகர் மற்றும் எழில்நகர் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இங்கு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நிலவொளி கல்வி, டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள், யோகா, தியானம், தற்காப்பு கலை, பண்பாடு, விளையாட்டுத்துறை என பல்வேறு வகையான பயிற்சிகள் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இதைவிட சிறப்பாக, ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்திலும் கல்வியிலும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லூரியில் சேர்ப்பதற்காக வெ.இறையன்பு ஐஏஎஸ், உதவி வருகிறார்.
அவரின் உதவி மூலம், கடந்தாண்டு 31 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் 55 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கும், கடந்தாண்டைப் போலவே தற்போதும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உதவியுள்ளார். அவரின் உதவி மூலம் கல்லூரியில் சேர்த்துள்ள அனைவரும் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
விளிம்பு நிலை மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டிய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், இன்று திடீரென்று கண்ணகி நகருக்கு வருகைப் புரிந்தார். நிகழாண்டில் கல்லூரியில் சேர்ந்துள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களை சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
மாணவர்கள், தங்களின் முதல் நாள் கல்லூரி அனுபவங்களையும் அவர்களின் நோக்கங்கள் மற்றும் அதற்கான அவர்களின் முன்னெடுப்புகள் குறித்தும் உற்சாகமாக தெரிவித்தார்கள்.
அதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த வெ.இறையன்பு ஐஏஎஸ், அவர்களின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன், நோக்கங்கள் நிறைவேறவும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் கற்பித்து வரும் மாலை நேர பயிற்சி வகுப்பு ஆசிரியர்களிடமும் தலைமைச் செயலாளர் கலந்துரையாடினார்.
பின்னர், தலைமைச் செயலாளர் பேசியபோது, மற்றவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் நமது பகுதியின் வளர்ச்சிக்கும், சமுதாய மாற்றத்திற்கும் பேருதவியாக இருக்கும். தங்களின் சமூகத்திற்கான பணிகள் தொடர நானும் என்னை போன்றோரும் எப்பொழுதும் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார் .
தலைமைச் செயலாளரின் எதிர்பாராத வருகையாலும், அன்பான அறிவுரைகளாலும் பயிற்சி ஆசிரியர்களும், கல்லூரி மாணவர்களும் மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர். வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் உற்சாகம் மிகுந்த வார்த்தைகளும், பொதுநலனில் அவர் காட்டி வரும் அக்கறையும், தங்கள் பணிகள் மேலும் செழுமையடையவும், மிகச் சிறப்பாக செய்வதற்கும் பேருதவியாக அமைந்ததாக பயிற்சி ஆசிரியர்களும், கல்லூரி மாணவர்களும் தெரிவித்தார்கள்.