திமுகவின் பொதுச் செயலாளராக உயர்ந்த இடத்தில் அமர்ந்த போதும், வேலூர் மாவட்ட உட்கட்சி அரசியலில் அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து தலையிட்டு வருகிறார். அவரும், அவரது புதல்வரும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களை சீண்டிப் பார்க்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருவதன் வெளிப்பாடுதான், இன்றைக்கு ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக கவுன்சிலர்களே இரு கோஷ்டியாக பிரிந்து மோதிக் கொண்ட நிகழ்வாகும்.
ஆளும்கட்சி கவுன்சிலர்களை தடியடி நடத்தி கலைக்க வேண்டிய நிலைக்கு சென்று விட்டனர் போலீஸார். ஆளும்கட்சியான திமுகவுக்கு இது மிகப்பெரிய அவமானம் என்றும் இந்த மோதலின் பின்னணியில் அமைச்சர் துரைமுருகனும், அவரது புதல்வர் கதிர் ஆனந்த் எம்.பி.யும் உள்ளதாக ஆவேசம் அடங்காமல் குமறுகிறார்கள் திருப்பத்தூர் மாவட்ட திமுக முன்னோடிகள்…
இதன் பின்னணி இதுதான்…
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற்றிருந்தாலும் கூட ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளை பிடிக்க, அக்கட்சிக்குள் நடக்கும் மோதல்கள், உள்ளூர் அளவில் திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தரும் வகையில் அமைந்திருக்கிறது என்று புலம்புகிறார்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக முன்னணி நிர்வாகிகள்.
உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிப் பெற்றுள்ள உறுப்பினர்கள், தங்களுக்குள் ஒருவரை ஒன்றிய குழுத் தலைவராகவும், மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும் ஜனநாயக ரீதியாக, பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம், திமுக பொதுச் செயலாளராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ள துரைமுருகனின் தலையீடுதானாம்.
வேலூர் மாவட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது என்ற அடிப்படையில்தான், அவருக்கு திமுக பொதுச் செயலாளர் எனும் மிகப்பெரிய பதவி வழங்கப்பட்டது. ஆனாலும், துரைமுருகனின் குறி, வேலூர் மாவட்டத்தையே மையமாக கொண்டிருக்கிறது என்று மனம் வெதும்பும் திமுக முன்னணி நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தலையொட்டி அவரும், அவரது புதல்வர் கதிர் ஆனந்த் எம்.பி.யும் காய் நகர்த்திக் கொண்டிருக்கும் சித்து விளையாட்டுகளை புட்டு புட்டு வைத்தார்கள்.
கடந்த பத்தாண்டு காலம் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, துரைமுருகனும் தற்போதைய திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ.வும் குரு, சிஷ்யன் என்ற கணக்கில் அன்பு செலுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஆளும்கட்சியாக திமுக இன்றைக்கு உருவெடுத்துள்ள நிலையில் இருவருக்கும் இடையேயான உறவு எலியும், பூனையாக மாறியிருக்கிறது. தன்னை தவிரவும், தனது புதல்வர் கதிர் ஆனந்ததைத் தவிரவும் வேறு யாரும் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
அதற்காக, ஊரக அளவில் பொறுப்பாளர்களிடையே மோதலை உருவாக்கும் காரியங்களை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ., அவரின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டத்திற்குள் யார் ஒன்றிய குழுத் தலைவராக வர வேண்டும், யார் மாவட்ட பஞ்சாயத்து தவைராக வர வேண்டும் என்பதையெல்லாம் அமைச்சர் துரைமுருகனும், அவரது புதல்வர் கதிர் ஆனந்தும்தான் முடிவு செய்துள்ளார்கள்.
ஆலங்காயம் ஒன்றியத்திற்கு நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 18 இடங்களில் தி.மு.க.,- 11, அ.தி.மு.க., – 4, பா.ம.க.,- 2 மற்றும் சுயேட்சை ஒரு இடம் என வெற்றி பெற்றுள்ளன. ஆலங்காயம் ஒன்றியத்தை பொறுத்தவரை தேவராஜுக்கு கௌரவ பிரச்னை. இங்குள்ள ஒரு வார்டில் அவரது இளைய மகன் பிரபாகரனின் மனைவி காயத்ரி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த ஒன்றியத்தின் தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அவரை ஒன்றிய குழுத் தலைவராக்க முயற்சிக்கிறார் தேவராஜ் எம்.எல்.ஏ. ஒரு மாவட்டத்தின் செயலாளர், தனது மருமகளை சேர்மன் பதவிக்கு கொண்டு வர ஆசைப்படுகிற போது, அதில் கொள்ளியை அள்ளிப் போடுகிற வகையில் செயல்பட்டு வருகிறார் தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன். அவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் ஏலகிரியில் உள்ளது. அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருபவர் பாரி. இவரது மனைவி சங்கீதா, ஆலங்காயம் ஒனறியத்திற்கு உட்பட்ட வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். அவரை தேவராஜ் மருமகளோடு மோத விடுகிறார் துரைமுருகனின் புதல்வர் கதிர் ஆனந்த்.
திமுகவில் வெற்றிப் பெற்றுள்ள 11 பேரில், 5 கவுன்சிலர்கள் தேவராஜின் கட்டுப்பாட்டிலும், 6 பேர் கதிர் ஆன்ந்த் கட்டுப்பாட்டிலும் உள்ளார்கள். ஒன்றிய குழுத் தலைவர் தேர்தலில் தனது பணியாளர் மனைவியை சேர்மன் ஆக்கி, ஆலங்காயம் ஒன்றியத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள காய் நகர்த்தும் கதிர் ஆனந்த், திரைமறைவில் அதிமுக, பாமகவிடமும் பேசி வருகிறார். ஒருவேளை தேவராஜ் ஆதரவு கவுன்சிலர்கள் காலை வாரினாலும் கூட, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மூலம் சங்கீதாவை, ஒன்றிய குழுத் தலைவராக்குவதற்காக எல்லா உள்ளடி வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.
இதனால் மனம் நொந்து போன தேவராஜின் ஆதரவாளர்கள், கதிர் ஆனந்திடம் சமரசம் பேச முயன்ற போதுதான், அவர் பேசிய டைலாக்கை கேட்டு, சமரசம் பேச வந்த முன்னணி நிர்வாகிகளே அதிர்ந்து போய்வுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை துரைமுருகன்தான் ஸ்டாரு.. திமுக தலைவர் சொன்னாலும் கூட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எந்த பருப்பும் வேகாது என்று கூறியுள்ளார் கதிர் ஆனந்த் எம்.பி. அவர் இந்தளவுக்கு பேசுவதற்கான துணிச்சலே அவரை பின்னணியில் இருந்து இயக்கி கொண்டிருக்கும் அமைச்சர் துரைமுருகன்தான் என்கிறார்கள் திருப்பத்தூர் மாவட்ட திமுக முன்னோடிகள். தந்தை, தனையன் ஆகியோரின் உள்ளடி வேலைகளால் ஆலங்காயம் ஒன்றிய தி.மு.க.,வில் இரண்டு கோஷ்டி உருவாகி, மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
ஆலங்காயம் ஒன்றியத்தோடு அமைச்சர் துரைமுருகனும், எம்.பி. கதிர் ஆனந்த்தும் தங்களது உள்ளடி வேலைகளை நிறுத்திக் கொண்டார்களா என்றால் இல்லை என்பதுதான் வேதனைக்குரியது என்கிறார்கள் ஜோலார்பேட்டை ஒன்றிய திமுக முன்னணி நிர்வாகிகள்.
திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரான தேவராஜ், எம்எல்ஏ தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதி ஜோலார்பேட்டை. இந்த ஒன்றியத்தின் தலைவர் தேர்தலிலும் அமைச்சர் துரைமுருகன் நேரடியாக தலையிட்டு, தேவராஜ் எம்.எல்.ஏ.வை உச்சபட்சமாக சீண்டிக் கொண்டிருக்கிறார். இந்த ஒன்றியத்தில் உள்ள 25 வார்டுகளில் தி.மு.க. 18 இடங்களை கைப்பற்றியுள்ளது. 6 இடங்களில அதிமுகவும் சுயேட்டை ஒருவரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் உமா, மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் என்பவரின் மனைவி சத்யா ஆகியோர் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றனர். இவர்களிடையே மூன்றாவது நபராக தனது உறவினரான ஒட்டப்பட்டி காந்தி என்பவரின் மனைவி ஸ்ரீதேவியை களத்தில் இறக்கிவிட்டுள்ளளார் அமைச்சர் துரைமுருகன்.
தான் வெற்றி பெற்றுள்ள ஜோலார்பேட்டையிலும் அமைச்சர் துரைமுருகன் தலையீடுவதை கண்டு ஆத்திரத்தின் உச்சத்தில் உள்ளார் தேவராஜ் எம்எல்ஏ. ஸ்ரீதேவியை ஒன்றிய குழுத் தலைவராக்கும் முயற்சியில் தீயாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் கதிர் ஆனந்த் எம்.பி. இதற்காக தந்தையைப் போல, தனையனும் காய் நகர்த்தும் கேவலமான அரசியலைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள் உள்ளூர் திமுக பிரமுகர்கள்.
ஸ்ரீதேவியின் வெற்றிக்காக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியுடனும் அன்டர் கிரவுன்ட் டீலிங்கில் பிஸியாகி இருக்கிறார் கதிர் ஆனந்த். ஆலங்காயம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய இரண்டு ஒன்றியங்களிலும் தங்கள் ஆதரவாளர்களை ஆதரித்து வெற்றி பெற செய்தால், இரண்டு ஒன்றியங்களிலும் துணைத்தலைவர் பதவி அதிமுகவுக்கு தாரை வார்க்கப்படும் என்பதுதான் கதிர் ஆனந்த்தின் ஆஃபர்.
இப்படியெல்லாம் டீலிங் பேசப்படுவதை கேட்டு திருப்பத்தூர் திமுக நிர்வாகிகள் கொதிக்காமல் இருந்தால்தான், அவர்களின் ஆண்மையைப் பற்றி சந்தேகப்பட வேண்டும் என கோபமாகவே கேட்கிறார்கள், மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தேவராஜின் ஆதரவாளர்கள்.
அதன் விளைவுதான், ஆலங்காயம் ஒன்றியத்தில் இன்றைக்கு கவுன்சிலராக பதவியேற்றுக் கொண்ட திமுகவினர், இரு கோஷ்டியாக பிரிந்து நின்று தாக்கிக் கொண்டார்கள். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
உண்மையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுகவை பொறுத்தவரை, அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் கட்டளைக்கு மதிப்பில்லையா? என்ற கேள்விதான் எழுகிறது. அமைச்சர் துரைமுருகன்தான் ஸ்டார் என்பதை திமுக தலைமையும் ஒப்புக் கொள்கிறதா?
ஆலங்காயம் மோதல் நிகழ்வுக்குப் பிறகாவது திமுக தலைமை விழித்துக் கொள்ளுமா?
கதிர் ஆனந்த் எம்.பி.,யுடன் பாரி – சங்கீதா குடும்பத்தினர்,
சங்கீதா பாரிக்கு ஆதரவாக ஒரே அணியாக வந்த திமுக கவுன்சிலர்கள்…