Thu. May 9th, 2024

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக ஆளும்கட்சியான திமுக வேட்டையாடியிருந்தாலும் கூட, துருவ நட்சத்திரங்கள் போல, இளம் தலைமுறையினர் நிறைய பேர் போட்டியிட்டு வாகை சூடி, கிராம அளவிலான அரசியலுக்கு புது ரத்தம் பாய்ச்சி உள்ளனர். அந்த வகையில் 22 வதான யாருகலா, பஞ்சாயத்து தலைவராக அவதாரம் எடுத்திருப்பது, ஆச்சரியமானது அல்ல, இளம் தலைமுறையினருக்கு அவசியமானது..

திருநெல்வேலியில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமான தென்காசியில், கடையம் ஒன்றியத்திற்குட்பட்டது, வெங்காடம்பட்டி கிராமம். அண்மையில் இங்கு நடைபெற்ற பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ரேவதி முத்துவடிவு, தங்கசக்தி கனி, மணிமேகலா, மகேஸ்வரி ஆகிய நால்வருடன் மேலும் ஒருவராக போட்டியிட்ட ஸாருகலா தான், ஒட்டுமொத்த மகளிருக்கும் நம்பிக்கை நட்சத்திரம்.. மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றிக் கனியை பறித்துள்ளார் ஸாருகலா.

பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஸாருகலா, பொறியியல் பட்டதாரி ஆவார். 22 வயதில் பட்ட மேற்படிப்பில் சேர அவர் விண்ணப்பித்திருந்தார் . இந்த நிலையில், பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

அவரின் தந்தை ரவிசுப்பிரமணியன் தொழிலதிபர். தாய் சாந்தி ஆசிரியை. தம்பி அழகுசந்துரு +2 படித்துள்ளார்.

வெற்றியை கண்டு களிப்படைய வேண்டிய ஸாருகலா, அமைதியான மனநிலையிலேயே காட்சியளிக்கிறார். பல்வேறு தரப்பினரின் வாழ்த்துகளை எதிர்கொண்டிருந்த அவரிடம் பேசினோம். தனது எதிர்கால திட்டம் குறித்து மனம் திறந்தார் ஸாருகலா…

“எனக்குச் சிறு வயது முதலே சமூக சேவையில் ஆர்வம் அதிகம். என் தந்தை ரவிசுப்பிரமணியன் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியவில்லை. இந்த முறை இந்தப் பஞ்சாயத்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் என்னைப் போட்டியிடுமாறு பெற்றோர் சொன்னதும் சம்மதித்தேன்.

தேர்தலில் எல்லோரையும் போலவே நானும் பிரசாரம் செய்தேன். அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. எங்கள் பஞ்சாயத்தில் 23 சிறிய கிராமங்கள் இருக்கின்றன. அனைத்து கிராமங்களிலுமே குடிநீர் பிரச்னை உள்ளது. அதைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன்.

குற்றாலம் சீசன் சமயத்தில் கிடைக்கும் தண்ணீர் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கோவிலான்குளம் வரை வருகிறது. அந்தத் தண்ணீரை எங்கள் பகுதிக்கும் கொண்டுவர அதிகாரிகளிடம் பேசி திட்டம் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் குற்றாலம் சீசன் சமயத்தில் கிடைக்கும் தண்ணீரை குடிநீர் தேவைக்கும் விவசாயத்துக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அரசு சார்பில் எங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் மூடியே கிடக்கின்றன. அவற்றை திறக்கவும் அதன் மூலம் மாணவர்களுக்குப் பலன் கிடைக்கவும் ஏற்பாடு செய்வேன். அதேபோல பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர்த் தொட்டிகளைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தரமான சாலை வசதி, வடிகால் வசதி போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கல்லூரியில் சேர்ந்து மேல்படிப்பு படிக்கத் திட்டமிட்டு விண்ணப்பித்திருந்தேன். இந்த நிலையில், எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் நலனுக்கு முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவேன் என தன் மனதில் உள்ள லட்சிய திட்டங்களை எல்லாம் விரிவாக எடுத்துக் கூறினார்.

5 பேர் போட்டியிட்ட கிராம பஞ்சாயத்துத் தலைவருக்கான தேர்தலில் 3,336 வாக்குகள் பெற்று ஸாருகலா வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை பிடித்த ரேவதி முத்துவடிவுக்கு 2,540 வாக்குகள் கிடைத்துள்ளன. முதல் முறை தேர்தலில் போட்டியிட்ட ஸாருகலா, 796 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடியிருக்கிறார். பொறியியல் பட்டதாரியான ஸாருகலா, பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.