Sun. Nov 24th, 2024

கோவில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டை அகற்றி நிலத்தை மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..

கோவில் நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டின் பகுதியை 4 வாரங்களில் அப்புறப்படுத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே 177 ஏக்கரில் குயின்ஸ்லேன்ட் எனும் பெயரில் பொழுதுப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில், 21 ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அரசு நிலத்தை பயன்படுத்தியதற்காக 2 கோடியே 75 லட்சம் ரூபாய் குத்தகை தொகையை செலுத்த வேண்டுமென குயின்ஸ்லேன்ட் உரிமையாளருக்கு 2013 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் பிறப்பித்திருந்தார்.

அந்த உத்தரவை எதிர்த்து குயின்ஸ்லேண்ட் நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், தனியார் நிறுவனம் தாக்கல் செய்திருந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

குத்தகை காலம் முடிந்த பிறகு நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததற்காக 9 கோடியே 50 லட்சம் ரூபாயை பூந்தமல்லி காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால ஸ்வாமி கோவில் நிர்வாகங்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

வருவாய் துறைக்கு ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

தனியார் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலத்தை 4 வாரங்களில் தமிழக அரசு மீட்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட வேண்டும்

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என மற்றொரு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள்,மதம்,சாதி,மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும்.

பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள், கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க வேண்டும்.

சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை பராமரிக்க தமிழகத்தில் தலைவர் பூங்கா உருவாக்க வேண்டும்.

சமுதாயத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்த கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.