Thu. May 2nd, 2024

கொரோனா தடுப்பு நெறிமுறைகளின்படி, தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கின்றன. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் கோயில்களில் வழிபாடு நடத்த பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், தமிழக பாஜக, வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாட்களும் கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, வார கடைசியான மூன்று நாட்களிலும் கோயில்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, தமிழக பாஜக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

சென்னை பாரிமுனையில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோயில் அருகே நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இதில் கலந்துகொண்ட ஏராளமானோர், கோயில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் கொரோனோ தாக்கம் இல்லாத நிலையில், கோயில்களில் மூன்று நாட்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், திரையரங்குகள் அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகின்றன. திமுகவின் சித்தாந்தத்தை இந்து கோயில்களிலும் வழிபாட்டு முறைகளிலும் தமிழக அரசு கொண்டு வருவதை ஏற்க முடியாது. மதத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் பாஜக.வுக்கு கிடையாது. தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் கோயில் திறந்து பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக நல்ல முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையைப்போல, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மேலும் 11 கோயில்கள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக.வினர் கலந்துகொண்டனர்.