Fri. Nov 22nd, 2024

மேற்குவங்கம் மாநிலம் பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட .பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலை விட 58,832 வாக்குகள் மம்தா பானர்ஜி அதிகம் பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட அப்போதும் முதல்வராக இருந்த மம்தா, பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். தேர்தலில் வெற்றி பெறாத போதும் மீண்டும் அவர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், பதவியேற்ற நாளில் இருந்து 6 மாத காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றால்தான், அவர் பதவியில் நீடிக்க முடியும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதி காரணமாக, பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார்.

மம்தா போட்டியிடுவதற்காக, அந்த தொகுதியில் வெற்றிப் பெற்று மேற்கு வங்க அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, சோபன் தேவ் சட்டோபாத்யாயா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதியில் மம்தா போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. ஆனால், பாஜக சார்பில் பிரியங்கா திப்ரிவால் களம் கண்டார். கடுமையான போட்டிக்கு இடையே கடந்த 30 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. துவக்கம் முதலே முன்னிலையில் இருந்த மம்தா, நண்பகலில், 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கொல்கத்தா உள்பட மேற்கு வங்க மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர்.

இதனிடையே, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.