Wed. May 8th, 2024

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளார். அவரை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி ஏற்ற நாளில் இருந்து நிதி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், மோதல் போக்கையே கடைப்பிடித்து வருவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

குறிப்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை என்பது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.வினரின் விமர்சனமாகவும் இருந்து வருகிறது.

அதுவும் அண்மையில் உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புறக்கணித்த விவகாரத்தை, பாஜக.வும் அதிமுக.வும் போட்டி போட்டுக் கொண்டு விமர்சனம் செய்தன.

இந்நிலையில், ஜிஎஸ்டி சீர்த்திருத்த குழுவில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜனையும் நியமித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பிடிஆர் பழனிவேல் ராஜனின் இன்றைய சந்திப்பு தமிழக அரசியலில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இளம் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்த கடினமான ஆண்டிலும் வருமான வரித்துறையின் முயற்சிகளை பாராட்டினார்.

மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரி மற்றும் நிதி அமைச்சகத்தின் பிற துறைகளின் இளம் அதிகாரிகளுடன் அமைச்சர் சென்னையில் உரையாடினார்.

கோவிட்-க்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சியைப் பராமரிக்க வருமான வரித் துறை தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வரி நிர்வாகத்தை மாற்றுவதற்கு வரி அதிகாரிகள் மாற்றத்தின் முகவர்களாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

ஆயகர் பவனில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கான 19 மாடி குடியிருப்பு குடியிருப்பை நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.