அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிக நெருக்கமானவர் முருகானந்தம். இவர் புதுக்கோட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியின் போது சட்டத்திற்கு புறம்பாக அரசு ஒப்பந்தங்களைப் பெற்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்கள் மீது புகார்கள் வந்தன. வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்துள்ளதாகவும் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் பலர் புகார் கொடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், முருகானந்தமும், அவரது மனைவி காந்திமதி ஆகிய இருவரும் 15 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியாக சொத்து குவித்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீட்டில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல, அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், பழனிவேல் ஆகியோருக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. காலை முதல் இரவு வரை 16 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் முருகானந்தம் வீட்டில் மட்டும் 83 சவரன் நகை, 46 ஆயிரத்து 100 ரூபாய் ரொக்கம், மூன்றே முக்கால் கிலோ வெள்ளி,மற்றும் 40 லட்சம் ரூபாய் மதிப்பிற்கான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர்.