இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் புறப்பட்டுச் சென்றார். அந்த மாவட்டத்தில் நேற்று நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர், சாலை மார்க்கமாக சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். இரவு நேரத்தில், அதியமான் காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது எவ்வளவு விரைவாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படுகிறது என்று விசாரித்து அறிந்தார்.
தொடர்ந்து 2 ஆம் நாளாக இன்று தருமபுரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பாக நிறைவு பெற்றிருந்த வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஒகேனக்கல்லுக்கு புறப்பட்டுச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மீண்டும் திரும்பும் வழியில் தனியார் பள்ளி மாணவிகளையும் சந்தித்து படிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரித்து அறிந்தார். தொடர்ந்து வத்தல்மலை பழங்குடியினரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.